ஜாரிகண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் காட்டு யானைகளுடன் வீடியோ எடுக்க முயன்ற அமித் குமார் என்ற 32 வயது வாலிபர், யானை மிதித்து பரிதாபமாக உயிரிழந்தார். எட்டு யானைகள் கொண்ட கூட்டத்தின் மிக அருகே சென்ற போது, கோபமடைந்த யானைகள் அவரைத் தாக்கியதில் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும், ஆபத்தான முறையில் செயல்பட்டதே இந்த உயிரிழப்பிற்குக் காரணமாக அமைந்தது என்று அதிகாரிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். தற்போது ராம்கர் மற்றும் பொகாரோ மாவட்ட எல்லைகளில் சுமார் 42 யானைகள் குழுக்களாகப் பிரிந்து நடமாடி வருவதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
காட்டு விலங்குகளின் அருகே செல்பி எடுப்பதோ அல்லது தொந்தரவு செய்யும் விதமாக வீடியோ எடுப்பதோ சட்டப்படி குற்றம் என்பதோடு உயிருக்கு ஆபத்தானது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இளைஞரின் உடல் மீட்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்..
