கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த பிரபு என்பவர், தான் செய்யும் பயணங்களைப் படம்பிடிப்பதற்காக ட்ரோன் கேமரா வாங்கத் திட்டமிட்டுள்ளார். அப்போது இன்ஸ்டாகிராமில் பார்த்த கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி, அதில் குறிப்பிடப்பட்டிருந்த இணைப்பைக் கிளிக் செய்து ட்ரோன் கேமராவை ஆர்டர் செய்துள்ளார். முன்பணமாக ரூ.200 செலுத்திய அவர், மீதமுள்ள ₹2,000 தொகையைக் டெலிவரி செய்ய வந்த நபரிடம் வழங்கிவிட்டுப் பார்சலைப் பெற்றுக்கொண்டார்.
பாதுகாப்பிற்காகப் பார்சலைப் பிரிப்பதைச் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தவாறே திறந்து பார்த்த பிரபுவிற்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், அந்தப் பார்சலுக்குள் ட்ரோனுக்குப் பதிலாக வெறும் 2 பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே அடைத்து வைக்கப்பட்டிருந்தன. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், “எனக்கு ஏற்பட்டது சிறிய பண இழப்பாக இருந்தாலும், என்னைப்போலப் பலர் அதிக விலையுயர்ந்த பொருட்களை ஆர்டர் செய்து பெரிய அளவில் ஏமாற வாய்ப்புள்ளது” எனக் கூறி இணையவாசிகள் கவனமாக இருக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
