தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த பின்னடைவு மற்றும் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வரும் சூழலில், கட்சியைப் பலப்படுத்துவது குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர், திமுக மற்றும் தவெகவிற்கு நிகராகப் போட்டியிட்டுப் பாரம்பரிய வாக்குகளைத் தக்கவைக்க சசிகலா மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என ஆக்ரோஷமாக வலியுறுத்தினர். இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், கட்சியின் உட்கட்சி விவகாரங்களை தான் பார்த்துக் கொள்வதாகவும், நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துமாறும் எடப்பாடி பழனிசாமி கூறி விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார்.
ஏற்கனவே தஞ்சாவூர் மற்றும் மதுரை மாவட்ட ஆலோசனைக் கூட்டங்களிலும் டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற இதே கோரிக்கை எழுந்து காரசார விவாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பெரிய அளவிலான வெற்றிகள் கிடைக்காததால் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளதாகவும், வரவிருக்கும் உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்களில் கட்சியின் வாக்குகள் சிதறுவதைத் தடுக்கவே இந்த இணைப்பு அவசியம் என்றும் நிர்வாகிகள் பகிரங்கமாக தெரிவித்து வருகின்றனர். அடுத்தடுத்து பல்வேறு மாவட்டங்களிலும் இதே கோரிக்கை வலுத்து வருவதால் அதிமுக தலைமைக்கு அரசியல் நெருக்கடி கணிசமாக அதிகரித்துள்ளது.
