டெலிகிராம் செயலி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களுடன் உரையாடவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், வாட்ஸ்அப்பைப் போலவே செயல்படும் இந்த செயலியில், அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களின் புதிய திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள் சட்டவிரோதமாகப் பகிரப்பட்டு வருகின்றன. பல பயனர்கள் புதிய படங்களை திரையரங்குகளுக்கோ அல்லது ஓடிடி தளங்களுக்கோ செல்லாமல், டெலிகிராம் மூலமாகவே இலவசமாக டவுன்லோட் செய்து பார்க்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
இத்தகைய சட்டவிரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்திய அரசு தற்போது அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. திரைப்படங்கள் மற்றும் ஓடிடி உள்ளடக்கங்களை டெலிகிராமில் சட்டவிரோதமாக வெளியிடுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அந்நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த 15 நாட்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் நீட் தேர்வு வினாத்தாள் டெலிகிராம் செயலி மூலமாக கசிந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாக, சமீபத்தில் நீட் தேர்வு நடைபெற்ற சமயத்தில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் சில நாட்களுக்கு டெலிகிராம் செயலி தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மத்திய அரசு எடுத்துள்ள இந்த புதிய நடவடிக்கை, டெலிகிராம் தளத்தில் நடக்கும் பதிப்புரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த கடுமையான வழிமுறைகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
