“உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க..” காங்கிரஸின் ‘இதயம்’ பறிபோகிறதா?… மத்திய அரசு அனுப்பிய அதிரடி நோட்டீஸ்…!!

By Muthu Mani on பங்குனி 25, 2026

Spread the love

டெல்லியில் உள்ள காங்கிரஸின் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளமான 24, அக்பர் சாலை அலுவலகத்தை வரும் மார்ச் 28-ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 1978-ஆம் ஆண்டு முதல் அக்கட்சியின் முகவரியாகத் திகழும் இந்த அலுவலகத்துடன் சேர்த்து, ராய்சினா சாலையில் உள்ள இந்திய இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தையும் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2025 ஜனவரியில் ‘இந்திரா பவன்’ என்ற புதிய தலைமை அலுவலகத்தைத் திறந்ததாலும், அரசு விதிகளின்படி லூட்டியன்ஸ் பங்களா மண்டலத்தில் அரசியல் கட்சிகள் ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துக்களை வைத்திருக்க முடியாது என்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த அறிவிப்பு காங்கிரஸ் தலைவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அரசியல் உள்நோக்கம் கொண்ட, சட்டவிரோதமான நடவடிக்கை என்று விமர்சித்துள்ள மூத்த வழக்கறிஞரும் எம்.பி.யுமான அபிஷேக் மனு சிங்வி, இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடப்போவதாகத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தனது செயல்பாடுகளைப் புதிய கட்டிடத்திற்கு மாற்றியிருந்தாலும், பல தசாப்த கால அரசியல் உணர்வுகளோடும் வெற்றிகளோடும் பிணைந்துள்ள அக்பர் சாலை அலுவலகத்தை இழக்க அக்கட்சி விரும்பவில்லை. சட்ட ரீதியான அனைத்து வழிகளையும் பயன்படுத்தி இந்தத் தடையை முறியடிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

   

வரலாற்று ரீதியாகப் பார்த்தால், இந்த அக்பர் சாலை பங்களா பல முக்கியத் தருணங்களுக்குச் சாட்சியாக இருந்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி காலம் தொடங்கி, நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூகி வசித்தது வரை இதற்குப் பல சிறப்புகள் உண்டு. குறிப்பாக, 1977 தேர்தல் தோல்விக்குப் பிறகு இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் எழுச்சி கண்டது இந்த இடத்திலிருந்தே. ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் அதிகார மையமாகத் திகழ்ந்த இந்த அலுவலகம், தற்போது காலி செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவு தேசிய அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.