திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அரசு சமூக நீதி கல்லூரி மாணவியர் விடுதியில் தங்கி பயிலும் 40-க்கும் மேற்பட்ட மாணவிகள், தங்களுக்கு வழங்கப்படும் உணவு தரம் குறைந்ததாகவும், அதில் புழுக்கள் இருப்பதாகவும் கூறி விடுதி வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தரமற்ற உணவால் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு, கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் தவிப்பதாக வேதனை தெரிவித்த மாணவிகள், இது குறித்து புகார் அளித்தால் வார்டன் தங்களின் நடத்தையைக் கொச்சைப்படுத்தும் விதமாகப் பேசுவதாகவும், விடுதியை விட்டு வெளியேறச் சொல்லி மிரட்டுவதாகவும் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். குறிப்பாக, கேள்வி எழுப்பிய நான்கு மாணவிகளை மட்டும் குறிவைத்து விடுதியைக் காலி செய்ய வற்புறுத்துவது தங்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருவதாக அவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து வந்த பொன்னேரி போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மாணவிகள் போராட்டத்தைக் கைவிட்டனர். இருப்பினும், இந்த விவகாரம் அரசியல் ரீதியாகப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகக் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, “பெண்கள் மற்றும் மாணவிகளின் நலனை இந்த அரசு எவ்வாறு புறக்கணிக்கிறது என்பதற்கு இந்தப் போராட்டமே சாட்சி” என்று சாடியுள்ளார். மேலும், உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்தும் விடுதி நிர்வாகத்தின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவதாகக் கூறிக்கொள்ளும் திமுக அரசு, அவர்களின் அடிப்படை ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்தத் தவறிவிட்டதாக பாஜக விமர்சித்துள்ளது. மாணவிகளின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பதுதான் ‘திராவிட மாடலா?’ என்றும் நாராயணன் திருப்பதி தனது அறிக்கையில் காட்டமாக வினவியுள்ளார். விடுதி மாணவிகளின் இந்தப் போராட்டம் மற்றும் வார்டன் மீதான புகார்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
