தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் வடசென்னைக்கு உட்பட்ட பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கட்சி வட்டாரங்களில் பேச்சு பலமாக எழுந்துள்ளது. தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலம் எனப் பல்வேறு யூகங்கள் நிலவிய நிலையில், தற்போது விஜய்யின் பார்வை சென்னை பக்கம் திரும்பியிருப்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. பெரம்பூர் தொகுதியில் அவர் களம் காண்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகக் கூறப்படும் நிலையில், இதற்கான ஆரம்பக்கட்ட பணிகளில் த.வெ.க நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில், அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் நேரடியாகப் போட்டியிடாமல் தங்கள் கூட்டணியில் உள்ள பாமக-விற்கு அந்தத் தொகுதியை ஒதுக்கியுள்ளன. விஜய் போன்ற ஒரு பலமான வேட்பாளரை எதிர்கொள்ளும் வகையில், அதிமுக கூட்டணியில் பாமக களம் காண்கிறது. பாமக மொத்தம் 18 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில், பெரம்பூர் தொகுதி அவர்களுக்கு முக்கிய சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தங்களின் பலமான தொகுதிகளில் கவனம் செலுத்தும் வகையில் இந்த இட ஒதுக்கீடு அமைந்துள்ளதாகத் தெரிகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இக்கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளிலும், அமமுக 11 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. பாஜகவிற்கு மயிலாப்பூர், கோவை வடக்கு, நாகர்கோவில் உள்ளிட்ட முக்கிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல், டிடிவி தினகரனின் அமமுக சைதாப்பேட்டை, பூந்தமல்லி, மன்னார்குடி உள்ளிட்ட 11 தொகுதிகளில் களம் காண்கிறது. விஜய்யின் வருகை மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு எனத் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
