பொங்கலில் நெளிந்த புழு… வாடிக்கையாளர் மீது பொய் புகார்… வசமாக சிக்கிய ராமேஸ்வரம் கபே நிர்வாகம்… அதிர்ச்சி தரும் பின்னணி…!

By Nanthini on மார்கழி 3, 2025

Spread the love

பெங்களூரில் ராமேஸ்வரம் கபே என்ற பெயரில் பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இதன் கிளைகள் பல இடங்களில் உள்ளது. இந்த உணவகத்தின் ஒயிட்பீல்ட் கிளையில் கடந்த ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் எட்டு பேர் காயமடைந்த சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை கிளப்பி இருந்தது. இந்நிலையில் பெங்களூரு புறநகர் பகுதியான தேவணஹள்ளியில் செயல்பட்டு வரும் சர்வதேச விமான நிலையத்தில் இயங்கி வரும் ராமேஸ்வரம் கபே உணவகத்திற்கு விமான பயணி ஒருவர் சாப்பிடுவதற்காக சென்று உள்ளார். 300 ரூபாய் கொடுத்து அவர் பொங்கல் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது உணவில் ஏதோ நெளிந்த நிலையில் உற்றுப் பார்த்தபோது உணவில் புழு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து உடனடியாக தனது செல்போனில் அதை வீடியோ எடுத்து, பிறகு இது பற்றி ஹோட்டல் மேலாளர் இடம் புகார் தெரிவித்தார். இதற்கு ஹோட்டல் மேலாளரும் வருத்தம் தெரிவித்ததால் அந்த பயணி அங்கிருந்து சென்று விட்டார். இதனிடையே ராமேஸ்வரம் கபே ஹோட்டல் மேலாளர் விமான நிலைய போலீசில் சம்பந்தப்பட்ட பயணி மீது புகார் அளித்திருந்தார். அதில் தங்களுடைய ஹோட்டலில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்தது. அதை வீடியோவாக எடுத்த நபர் பணம் கேட்டு மிரட்டுவதாக கூறினார். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பயணியை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் பணம் கேட்டு மிரட்டவில்லை என்பது தெரிய வந்தது.

   

உணவில் புழு இருந்ததாக ஹோட்டல் மேலாளர் இடம் கூறியதும் அவர் வருத்தம் தெரிவித்ததால் அங்கிருந்து சென்று விட்டதாக அந்த நபர் தெரிவித்தார். விசாரணையில் இது உண்மை என்று தெரிய வந்த நிலையில் அந்த பயணி மீது ஹோட்டல் நிர்வாகம் பொய் புகார் அளித்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த பயணி ஹோட்டல் நிர்வாகம் மீது விமான நிலைய போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து ஹோட்டல் உரிமையாளர்களான ராகவேந்திரா ராவ், திவ்யா மற்றும் மேலாளர் சுமன் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரபலமான இந்த உணவகத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.