சூரியன் – சந்திரன் மற்றும் பூமியாகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகின்றது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வின்போது சூரியனின் ஒளியை சந்திரன் தற்காலிகமாக தடுத்து அந்த நேரத்தில் பூமியின் சில இடங்களில் நிழல் ஏற்படும். ஆனால் அடுத்து வரவுள்ள கிரகணம் ஒன்று உலகின் பெரும் பகுதியை இருளில் மூழ்கடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரிய வட ஆப்பிரிக்க கிரகணம் அல்லது நூற்றாண்டின் கிரகணம் என்று அழைக்கப்படும் இந்த சூரிய கிரகணம் வருகின்ற 2027 ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஏற்பட உள்ளது. ஆறு நிமிடங்கள் 23 வினாடிகள் நீடிக்க உள்ள இந்த கிரகணம் வழக்கத்திற்கு மாறாக நீண்ட காலமாகும்.
பெரும்பாலான மொத்த கிரகணங்கள் 3 நிமிடங்களுக்குள் முடிந்து விடும். இதற்கு முன்பு 1991 ஆம் ஆண்டு இது நடைபெற்றது. மீண்டும் கிரகணம் 2114 ஆம் ஆண்டு நடைபெறும். அட்லாண்டிக் பெருங்கடலில் தொடங்கக்கூடிய இந்த கிரகணம் மூன்று கண்டங்களைக் கடந்து இந்திய பெருங்கடலில் மறைந்து விடும். தெற்கு ஸ்பெயின், அல்ஜீரியா, மொராக்கோ, துனிசியா, லிபியா, எகிப்து, சவுதி அரேபியா, ஏமன், சோமாலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மில்லியன் கணக்கான மக்கள் இந்த கிரகணத்தை காண முடியும் என கூறப்படுகிறது. இதுபோன்ற கிரகணம் அடுத்த 100 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் என்றும் கூறப்படுகிறது.
