டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது பெற்றோர் தனது திருமணத்திற்காக ரூ.50 லட்சம் சேமித்து வைத்துள்ளதாகவும், ஆனால் அந்தத் தொகையை 1-2 நாட்களில் நடக்கும் ஆடம்பரத் திருமணத்தில் உறவினர்களைக் கவர வீணடிப்பதற்குப் பதிலாகத் தனக்குத் தந்தால், அதைக் கொண்டு சொந்தமாக தொழில் தொடங்கி சுயசார்புடைய பெண்ணாக மாற முடியும் என்றும் அழுதுகொண்டே பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெற்றாரின் பிடிவாதத்தால் தனது தொழிலதிபராகும் கனவு பாழாவதாக அப்பெண் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இப்பதிவு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பெருவாரியான நெட்டிசன்கள் அப்பெண்ணின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்றைய சூழலில் ஆடம்பரத்திற்காகவே பெரும்தொகை வீணடிக்கப்படுவதாகவும், அதைத் தவிர்த்துவிட்டு பிள்ளைகளின் தொழில் வளர்ச்சி மற்றும் எதிர்காலத்திற்காக அந்தச் சேமிப்பை முதலீடு செய்வதே அறிவுடைமை என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
