“பாலைவனமாகும் தமிழகம்”…. சம்பா சாகுபடியும் காலி…. உடனே இதை செய்யுங்க… தமிழக அரசுக்கு திருமாவளவன் கெடு….!

By Nanthini on ஆடி 30, 2026

Spread the love

கர்நாடக அரசு காவிரி நீரைத் திறந்துவிட மறுக்கும் பிடிவாதப் போக்கால், தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு பாலைவனமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடுமையாகச் சாடியுள்ளார். காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவைக் கூட மதிக்காமல், தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை வழங்காமல் கர்நாடகா தாமதிப்பது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது. குறுவை சாகுபடி ஏற்கெனவே கைநழுவிப்போன நிலையில், வரவிருக்கும் சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகியுள்ளதால் தமிழகத்தின் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரும் முடக்கத்தை எதிர்நோக்கியுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவில் வெறும் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே கர்நாடகா வழங்கியுள்ளது என்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வினீத் குப்தா தெரிவித்த தரவுகளை திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார். ஜூன் 1 முதல் ஜூலை 27 வரையிலான காலகட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 36.4 டி.எம்.சி அடியில், வெறும் 3.6 டி.எம்.சி நீர் மட்டுமே வந்து சேர்ந்துள்ளது. அடுத்தடுத்த உத்தரவுகளையும் மதிக்காமல் கர்நாடக விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் அம்மாநில அரசு நீரைத் தடுக்க முயல்வது, மத்திய அமைப்புகளையும் நீதிமன்றத்தையும் அவமதிக்கும் செயலாகும்.

   

இனிமேலும் கர்நாடக அரசு தானாக முன்வந்து நியாயம் செய்யும் என்று நம்பி அமைதி காப்பதில் பயனில்லை என்பதால், தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று விசிக கோரிக்கை விடுத்துள்ளது. டெல்டா பகுதியைப் பாதுகாக்கவும், தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டவும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து தங்களின் உரத்த குரலை மத்திய மற்றும் கர்நாடக அரசுகளுக்கு எதிராக வெளிப்படுத்த வேண்டியது தற்போதைய அவசியத் தேவையாகும்.