“நான் செத்துட்டேனா?”…. உயிரோடு வந்து அதிர்ச்சி கொடுத்த மூதாட்டி… மருமகள் செய்த தில்லாலங்கடி வேலை… மதுரையில் திடுக்கிடும் சம்பவம்….!

By Nanthini on ஆவணி 18, 2026

Spread the love

மதுரை மாவட்டம் சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்த மூதாட்டி முத்துப்பிள்ளை, உயிருடன் இருக்கும்போதே அவர் இறந்துவிட்டதாகப் போலியான வாரிசுச் சான்றிதழ் தயாரித்து மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரை இழந்த நிலையில், இரண்டு மகன்களுடன் வசித்து வந்த இவரது இளைய மகன் பெருமாள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்நிலையில், மூத்த மகனின் பெயரில் வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகையை மீட்கச் சென்றபோது, முத்துப்பிள்ளை இறந்துவிட்டதாகப் பதிவாகி உள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

விசாரணையில், மறைந்த இளைய மகன் பெருமாளின் மனைவி சுந்தரி, பூரண சந்திரன், பாண்டிச்செல்வி உள்ளிட்ட 6 பேரின் சாட்சி கையெழுத்துடன், கிராம நிர்வாக அலுவலர் (VAO) மற்றும் கிராம உதவியாளர் மூலம் இந்த போலியான வாரிசுச் சான்றிதழைப் பெற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்தது. தன் மகனுக்குச் சொந்தமான நிலம் மற்றும் நகைகளை அபகரிக்கும் நோக்கில், சிலரின் தூண்டுதலால் இந்தத் துரோகம் அரங்கேற்றப்பட்டதாக முத்துப்பிள்ளை குற்றம்சாட்டியுள்ளார்.

   

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் நியாயம் கேட்கச் சென்றபோது, இச்சம்பவத்தை வெளியே சொல்ல வேண்டாம் எனக் கூறி, சுந்தரி மீது மட்டும் புகார் அளிக்குமாறு அவரிடம் கடிதம் எழுதி வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் தனது உயிருக்கு ஆதரவும் பாதுகாப்பும் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்ட மூதாட்டி, தன் மகனின் மரணத்திலும் தற்போது சந்தேகம் இருப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

   

மன உளைச்சலுக்கு ஆளான மூதாட்டி முத்துப்பிள்ளை, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் சங்கீதாவை நேரில் சந்தித்து மனு அளித்தார். அப்போது, தனக்கு நீதி வேண்டி ஆட்சியரின் காலில் விழுந்து கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது. போலியான சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள், மருமகள் சுந்தரி மற்றும் பொய் சாட்சி கையெழுத்திட்ட நபர்கள் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.