சூரத்தைச் சேர்ந்த 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தனக்குத் திருமணத்திற்காகப் பெண் தேடி வந்த நிலையில், ‘Shaadi.com’ இணையதளம் மூலம் மும்பையைச் சேர்ந்த அர்ச்சனா என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. திருமணத்திற்கு முன்பே, தான் கூட்டுக் குடும்பமாக வாழ முடியாது என்று அந்தப் பெண் நிபந்தனை விதித்துள்ளார்; அதற்கு அந்த நபரும் சம்மதித்துள்ளார். பெண்ணின் தந்தை திருமணச் செலவிற்காக ₹3 லட்சம் கேட்ட நிலையில், மாப்பிள்ளை வீட்டார் ₹2 லட்சம் ரொக்கத்துடன், திருமண ஆடைகள் மற்றும் நகைகளையும் வாங்கிக் கொடுத்துள்ளனர்.
கடந்த 2026 பிப்ரவரி 3-ம் தேதி இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. ஆனால், திருமணமான நாளிலிருந்தே அர்ச்சனா தனது கணவருடன் உடலுறவு கொள்ளத் தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். திருமணம் முடிந்து வெறும் 10 நாட்களே ஆன நிலையில், அவர் தனது தந்தை வீட்டிற்குச் சென்றுவிட்டார். செல்லும்போதே தாலிச் சரடு, மூக்குத்தி, கொலுசு மற்றும் தங்கச் சங்கிலி என சுமார் ₹3.93 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பொருட்களைத் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார்.
அதன்பின்னர், கணவனின் அழைப்புகளுக்கும் குறுஞ்செய்திகளுக்கும் அர்ச்சனா பதில் அளிக்கவில்லை. இதனால் நேரில் சென்ற கணவரிடம், தன்னால் அவருடன் குடும்பம் நடத்த முடியாது என்று அர்ச்சனா திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அதோடு நில்லாமல், விவாகரத்து வேண்டுமென்றால் மாதம் ₹50,000 ஜீவனாம்சம் தரவேண்டும் என்றும், இல்லையெனில் அவர் மீது பொய் கற்பழிப்பு (Rape Case) வழக்குத் தொடரப்போவதாகவும் மிரட்டியுள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
