தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக முதல்வராகப் பதவியேற்கிறார். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, மெஜாரிட்டிக்கான எண்ணிக்கையை எட்ட திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவைப் பெற்றது. காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் முஸ்லிம் லீக் என மொத்தம் 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர், விஜய்யை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து இன்று பிரம்மாண்டமான பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
விஜய்யின் இந்த அரசியல் வெற்றிக்குத் தோள் கொடுக்கும் விதமாக, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை முதன்முதலாக அறிவித்தது. தேர்தலில் வெற்றி பெற்ற 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும் விஜய்க்கு ஆதரவு வழங்கியுள்ளனர். மேலும், வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2029 மக்களவைத் தேர்தலிலும் தவெக-வுடன் கூட்டணி தொடரும் என காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு மத்தியில், ஒரு புதிய மாற்றத்திற்கான அச்சாணி போடப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் கொண்டாடும் வகையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் தனது எக்ஸ் தளத்தில் ஒரு சுவாரசியமான வீடியோவை வெளியிட்டுள்ளார். 49 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், முதல்வராகப் பதவியேற்கும் விஜய்யும், ராகுல் காந்தியும் கோட் மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்து ஸ்டைலாக நடந்து வந்து கைகோர்ப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. “தமிழக முதல்வர் விஜய் மற்றும் வருங்கால பிரதமர் ராகுல் காந்தி” என்ற வாசகத்துடன் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, தவெக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்று காலை 10 மணிக்குத் தொடங்கும் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி நேரில் பங்கேற்று விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்க உள்ளார். இவர்களுடன் ஆதரவு அளித்த கூட்டணி கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் எனப் பெரும் பட்டாளமே இந்த விழாவில் கலந்து கொள்கிறது. ஒரு நடிகராகத் திரையில் பல சாதனைகளைப் படைத்த விஜய், தற்போது தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்று தனது அரசியல் இன்னிங்ஸைத் தொடங்குவதால், ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் இன்று நேரு உள்விளையாட்டு அரங்கின் பக்கம் திரும்பியுள்ளது.
Tamil Nadu Cm @actorvijay with Future PM @RahulGandhi pic.twitter.com/l2qboTn6Ra
— Girish Chodankar (@girishgoaINC) May 9, 2026
