தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்துள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு ‘தாயுமானவர் திட்டம்’ மூலம் ரேஷன் பொருட்களை வீடு தேடிச் சென்று விநியோகம் செய்து வருகிறது. 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக நடமாட முடியாத மாற்றுத்திறனாளிகள் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆகஸ்ட் 2026 மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யும் தேதிகள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, திருவாரூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஆகஸ்ட் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தகுதியான பயனாளிகளின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். எனவே, இம் மாவட்டங்களைச் சேர்ந்த முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அரசு வழங்கும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களுக்குரிய ரேஷன் பொருட்களைப் பெற்றுப் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
