மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள முகமது நசிபுத் என்பவருக்குச் சொந்தமான இடங்களை இலக்கு வைத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் கைபற்றப்பட்டுள்ளன. சட்டவிரோத கல்குவாரி மற்றும் கால்நடை கடத்தல் விவகாரங்களில் தொடர்புடைய அவர் தலைமறைவாக இருக்கும் சூழலில், அவரது மேலாளரின் வீட்டில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக ரூ.28.50 கோடி ரொக்கப் பணமும், சுமார் 15 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் மற்றும் பிஸ்கட்டுகளும் கண்டெடுக்கப்பட்டு அதிகாரிகளையே திகைப்பில் ஆழ்த்தின.
பறிமுதல் செய்யப்பட்ட மொத்தப் பொருட்கள் மற்றும் பணத்தின் மதிப்பு சுமார் ரூ.50 கோடியைத் தாண்டும் நிலையில், அவை பாதுகாப்பாக இரும்புப் பெட்டிகளில் வைக்கப்பட்டு காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. கைது செய்யப்பட்ட மேலாளரின் குடும்பத்தினர் அப்பெட்டிகளில் என்ன இருந்தது என்பது தங்களுக்குத் தெரியாது எனக் கூறியுள்ள நிலையில், அப்பகுதியில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய தொகையாக இது பார்க்கப்படுகிறது. இந்தச் சட்டவிரோதப் பணக் குவிப்பிற்குப் பின்னால் உள்ள முக்கிய குற்றவாளிகளைக் கண்டறிய காவல்துறையினர் விசாரணையை வேகப்படுத்தியுள்ளனர்.
