கடைசி நேரத்தில் மாறிய ஆட்டம்… தோக்குற மேட்ச்-ஐ தட்டித் தூக்கிய வில் ஜாக்ஸ்… நியூசிலாந்தை அலறவிட்ட இங்கிலாந்தின் அதிரடி வெற்றி..!!

By Soundarya on மாசி 28, 2026

Spread the love

கொழும்பில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை சூப்பர்-8 சுற்று லீக் ஆட்டத்தில், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 39 ரன்களும், டிம் சைபர்ட் 35 ரன்களும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் வில் ஜாக்ஸ், அடில் ரஷித் மற்றும் ரேஹான் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்தின் ரன் குவிப்பைத் தடுத்தனர்.

தொடர்ந்து 160 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு கடைசி நேரத்தில் பெரும் சவால் காத்திருந்தது. ஆட்டத்தின் கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்ட இக்கட்டான நிலையில், வில் ஜாக்ஸ் மற்றும் ரேஹான் அகமது ஜோடி அதிரடியில் இறங்கியது. மைதானத்தின் நாலாபுறமும் சிக்சர் மற்றும் பவுண்டரிகளை விளாசிய இந்த ஜோடி, 19.3 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணியை 6 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுக்க வைத்து அபார வெற்றி பெறச் செய்தது.

   

தோல்வியின் பிடியில் இருந்த இங்கிலாந்து அணியை மீட்டு வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற வில் ஜாக்ஸ், 32 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, பேட்டிங்கிலும் அதிரடி காட்டி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த வில் ஜாக்ஸ் ‘ஆட்ட நாயகன்’ (Player of the Match) விருதை வென்றார். சமூக வலைதளங்களில் இவரது அதிரடி ஆட்டம் தற்போது வைரலாகி வருகிறது.