தமிழக அரசியலில் கூட்டணி குறித்த எதிர்பார்ப்புகள் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ முடிவை இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கவுள்ளார். நேற்று அன்புமணி ராமதாஸுக்கு எதிராக நிலுவையில் இருந்த சின்னம் தொடர்பான வழக்கு வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து, அக்கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைக்கக்கூடும் என்ற பலமான யூகங்கள் நிலவி வந்தன.
இருப்பினும், இதற்கு முற்றிலும் மாறாக, பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திறக்கப்பட்டுள்ள NDA (தேசிய ஜனநாயக கூட்டணி) தேர்தல் அலுவலக முகப்பில் கட்டப்பட்டுள்ள தோரணங்களில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தச் சம்பவம் பாமக மீண்டும் பாஜக தலைமையிலான கூட்டணியிலேயே நீடிக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
