தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் போதிய தயாரிப்பு இன்றி ஊடக விவாதங்களில் பங்கேற்பதும், அடிப்படை கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தெரியாமல் பேசுவதும் சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாகி வருகிறது. இத்தகையச் சூழலைத் தவிர்க்கும் பொருட்டு, தவெக தலைவர் விஜய் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் எவரும் தலைமைக் கழகத்தின் முன்அனுமதி பெறாமல் எவ்வித ஊடக விவாதங்களிலும் கலந்து கொள்ளக்கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நேரடிப் பேட்டிகள் மற்றும் யூடியூப் நேர்காணல்கள் என எதிலும் தன்னிச்சையாகப் பங்கேற்கக் கூடாது என இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. முறையான அனுமதியின்றி தேசிய அல்லது மாநில ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலான பேச்சுகளைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கட்சித் தலைமை தெளிவுபடுத்தியுள்ளது.
