காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே கள்ளக்காதலை மறைக்க பெண்ணிடம் ரூ. 25 லட்சம் பறித்து, பாலியல் வன்கொடுமை செய்த திமுக பிரமுகர் மகன் உள்ளிட்ட மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ஆர்.என்.கண்டிகை பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், தனது கணவரின் உறவினர் ஒருவருடன் கடந்த சில காலமாக நெருங்கிப் பழகி வந்துள்ளார். இருவரும் வீட்டிற்குத் தெரியாமல் தனிமையில் சந்தித்து வந்ததை கவனித்த அதே பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள், அவர்களை ரகசியமாகப் புகைப்படம் எடுத்துள்ளனர். பின்னர் அந்த அந்தரங்கப் புகைப்படங்களை காட்டி, அந்தப் பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதோடு, கணவரிடம் காட்டிவிடுவோம் என மிரட்டிப் பணமும் பறிக்கத் தொடங்கியுள்ளனர்.
கள்ளக்காதல் விவகாரம் கணவனுக்குத் தெரிந்தால் குடும்பம் சீரழிந்துவிடும் என்ற அச்சத்தில், அந்தப் பெண் யாரிடமும் சொல்லாமல் சிறுகச் சிறுக சுமார் 20 லட்சம் ரூபாய் வரை அந்த இளைஞர்களிடம் கொடுத்துள்ளார். இருப்பினும் பேராசை பிடித்த அந்த கும்பல், மீண்டும் 5 லட்சம் ரூபாய் கேட்டு அந்தப் பெண்ணுக்குத் தொடர்ந்து கடுமையான தொல்லை கொடுத்து வந்துள்ளது. வேறு வழியின்றி, தனது கணவர் சீட்டு பணம் கட்டுவதற்காக வீட்டில் வைத்திருந்த 5 லட்சம் ரூபாயையும் திருடி, அந்த வாலிபர்களிடம் அந்தப் பெண் ஒப்படைத்துள்ளார்.
இந்நிலையில், சீட்டு பணம் கட்டாதது குறித்து கணவர் கேட்டபோது தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தனது தவறை ஒப்புக்கொண்ட பெண், இளைஞர்கள் தங்களை மிரட்டிப் பணம் பறித்த விவகாரத்தையும் கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாக, அந்தப் பெண் வீட்டில் இருந்த ஆசிட்டைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர், தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் பெருநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மிரட்டல் விடுத்த அதே பகுதியைச் சேர்ந்த திமுக ஊராட்சி மன்றத் தலைவர் மகன் சந்தோஷ் டேனியல், மைக்கேல்ராஜ் மற்றும் மார்ட்டின் டேனியல் ஆகிய மூவரையும் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களது செல்போன்களைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், அந்தரங்கப் புகைப்படங்களை முழுமையாக அழித்து, அதன் நகல்கள் (Copies) வேறு எங்கும் சேமிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
