‘எம்பிஏ சாய்வாலா’ என்று மக்களால் பரவலாக அறியப்படும் பிரபல இளம் தொழிலதிபர் பிரஃபுல் பில்லோரே, தான் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் பரவிய போலிச் செய்திகளை வன்மையாக மறுத்துள்ளார். எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் தொடங்கப்பட்ட இந்தத் தவறான தகவல், காட்டுத்தீ போல பரவி பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது. இதனால், நெட்டிசன்கள் பலரும் உண்மைத்தன்மையை அறியாமல் தங்களது இரங்கல் செய்திகளைப் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில், கூகுளில் தனது மரணம் குறித்து தேடப்பட்ட ஸ்கிரீன்ஷாட் ஒன்றை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த பிரஃபுல், “இது முற்றிலும் கேலிக்குரியது, அத்தோடு மிகவும் புண்படுத்தக்கூடியது. தயவுசெய்து இதுபோன்ற போலிச் செய்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள், நான் உயிரோடுதான் இருக்கிறேன்” என்று பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்தச் சம்பவம் இணையவாசிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது ஆதரவாளர்களும் ரசிகர்களும் பிரஃபுல் பில்லோரேவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். “அண்ணே, நீங்கள் தைரியமாக இருங்கள், இன்றைய டிஜிட்டல் உலகில் வெறுப்புணர்வை பரப்புவது சாதாரணமாகிவிட்டது” என்றும், “உங்களது வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படுபவர்களே இந்த வேலையைச் செய்துள்ளனர்” என்றும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு ஆறுதல் கூறி வருகின்றனர். வெறும் 8,000 ரூபாய் முதலீட்டில் தேநீர் கடையைத் தொடங்கி, இன்று நாடு முழுவதும் அறியப்படும் ஒரு பிராண்டாக ‘MBA சாய்வாலா’வை மாற்றிய பிரஃபுல்லின் இந்தச் சம்பவம், சமூக ஊடகங்களில் ஒரு தகவலைப் பகிரும் முன் அதன் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.
