பேருந்து, கார், கப்பல் போன்ற மற்ற வாகனங்களைப் போலன்றி விமானங்களில் மட்டுமே வட்ட அல்லது நீள்வட்ட வடிவ ஜன்னல்கள் உள்ளன. 1950களில் விமானங்கள் அதிக உயரத்தில் பறக்கத் தொடங்கியபோது, மற்ற வாகனங்களைப் போலவே சதுர வடிவ ஜன்னல்களே அமைக்கப்பட்டன. உயரத்தில் பறக்கும்போது விமானத்தின் உள்ளே அதிக அழுத்தமும் வெளியே குறைந்த அழுத்தமும் நிலவுவதால், ஜன்னல்களின் மீது கடும் அழுத்தம் விழுகிறது. இத்தகைய சமயத்தில் சதுர வடிவ ஜன்னல்களின் கூர்மையான மூலைகளில் அழுத்தம் குவிந்து, 1954-இல் ‘டி ஹாவில்லாண்ட் காமட்’ விமானங்கள் வானிலேயே வெடித்துச் சிதறிப் பெரும் விபத்துக்குள்ளாகின.
அந்த விபத்துகளுக்கான காரணங்களை ஆராய்ந்தபோது, சதுர வடிவ ஜன்னல்களின் மூலைகளில்தான் அழுத்தம் அதிகரித்து விமானத்தின் உடல் உடைந்திருப்பது தெரியவந்தது. இதன்பின்னரே பொறியாளர்கள் ஜன்னலின் வடிவத்தை வட்டமாக மாற்றினர். கூர்மையான மூலைகள் இல்லாத வட்டமான ஜன்னல்களில் உள்ளிருந்து வரும் காற்றின் அழுத்தம் ஜன்னலின் விளிம்புகள் முழுவதும் சீராகப் பரவுகிறது. இதனால் எந்தவொரு குறிப்பிட்ட புள்ளியிலும் கடுமையான அழுத்தம் உருவாகாமல் விபத்துகள் தடுக்கப்பட்டு, விமானப் பயணம் பாதுகாப்பானதாக மாறியது
மேலும், விமானத்தின் ஜன்னல்கள் மூன்று அக்ரிலிக் அடுக்குகளால் தயாரிக்கப்படுகின்றன. இதன் வெளி அடுக்கு வெளிப்புறச் சூழலையும், உள் அடுக்கு பயணிகளின் தொடுதலையும் தாங்கக்கூடியது. நடு மற்றும் வெளி அடுக்குகளுக்கு இடையேயான காற்று அழுத்தத்தைச் சமன் செய்யவும், கண்ணாடியின் மீது பனிமூட்டம் படிவதைத் தடுக்கவுமே ஜன்னலின் அடிப்பகுதியில் ஒரு சிறிய துளை அமைக்கப்பட்டுள்ளது. வடிவியலில் செய்யப்பட்ட இந்தச் சிறிய மாற்றம் விமான வரலாற்றிலேயே மிகச்சிறந்த பாதுகாப்புப் புரட்சியாகக் கருதப்படுகிறது.
