பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 15 வயதே ஆன இளம் கிரிக்கெட் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி, நடப்பு ஐபிஎல் தொடரில் தனது அதிரடியான பேட்டிங் பாணியால் புதிய வரலாற்றைப் படைத்து வருகிறார். ஜஸ்பிரித் பும்ரா, மிட்செல் ஸ்டார்க், புவனேஷ்வர் குமார் போன்ற உலகின் மிக அபாயகரமான, அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளையும் கொஞ்சமும் அஞ்சாமல் மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸர்களாகப் பறக்கவிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசனே, “ஒரு 15 வயது சிறுவனைப் பார்த்து நான் இந்த அளவிற்கு பயந்ததே இல்லை” என்று பாராட்டும் அளவுக்கு இவரது ஆட்டம் உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், உலகின் தலைசிறந்த பௌலரான ஜஸ்பிரித் பும்ரா வீசிய தனது இன்னிங்ஸின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து வான்கடே மைதானத்தையே அமைதியாக்கினார் சூர்யவன்ஷி. இப்படி சர்வதேச ஜாம்பவான்களையே தனது பேட்டிங்கால் வியர்க்க வைத்த இந்த இளம் வீரரால், இந்த ஐபிஎல் தொடரில் ஒரே ஒரு இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளரின் பந்துவீச்சை மட்டும் எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறார். அவர் வேறு யாருமல்ல, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் மொஹ்சின் கான் தான்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான கடந்த இரண்டு போட்டிகளில், சூர்யவன்ஷிக்கு எதிராக மொஹ்சின் கான் அசாத்தியமான ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளார். மொஹ்சின் கான் வீசிய ஒட்டுமொத்த 12 பந்துகளில் வைபவ் சூர்யவன்ஷியால் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது; மீதமுள்ள 10 பந்துகளும் ரன் ஏதுமற்ற ‘டாட்’ பால்களாக அமைந்தன. ஒரு சிக்ஸரோ அல்லது பவுண்டரியோ கூட அடிக்க விடாமல் சூர்யவன்ஷியை மொஹ்சின் கான் முற்றிலும் கட்டிப்போட்டார் என்பதுதான் இதில் ஆச்சரியமான உண்மை.
இந்த இருவருக்கும் இடையேயான மோதலில் மற்றொரு சுவாரசியமான முரண்பாடும் அரங்கேறியுள்ளது. லக்னோவுக்கு எதிரான கடந்த போட்டியில், சூர்யவன்ஷி 10 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு 93 ரன்கள் குவித்து லக்னோவின் ஒட்டுமொத்த பந்துவீச்சு வரிசையையும் சிதைத்திருந்தார். ஆனால், மொஹ்சின் கானின் ஓவரில் மட்டும் சிங்கிள் ரன் எடுக்கவே தடுமாறினார். ஐபிஎல் தொடரில் சூர்யவன்ஷிக்கு எதிராக ஒரு ‘மெய்டன்’ ஓவர் வீசி, அதன் கடைசிப் பந்தில் அவரை ஆட்டமிழக்கச் செய்த முதல் பௌலர் என்ற பெருமையையும் மொஹ்சின் கான் பெற்றுள்ளார். உலகத்தரம் வாய்ந்த பௌலர்களை துவம்சம் செய்த சூர்யவன்ஷி, மொஹ்சின் கானின் துல்லியமான லைன் மற்றும் லென்த் உத்திகளிடம் தொடர்ந்து விக்கெட்டைப் பறிகொடுத்து வருகிறார்.
