முருகனுக்கு உகந்த திதி சஷ்டி ஆகும். முருகப்பெருமானை மனதார வேண்டுபவர்கள் இந்த சஷ்டி தினத்தன்று விரதம் இருப்பது வழக்கம். ஒவ்வொரு மாதமம் சஷ்டி திதி வரும். ஆனால் வருடத்திற்கு ஒருமுறை ஐப்பசி மாதம் வரக்கூடிய சஷ்டி மிகவும் விசேஷமானது. அதற்கு காரணம் திருச்செந்தூரில் சூரசம்காரம் நடைபெறும். இதுதான் மகா சஷ்டியாக கருதப்படுகிறது. இது எப்போது வருகிறது இந்த விரதமுறையை எப்படி கடைப்பிடிப்பது என்பதை பற்றி இனி காண்போம்.
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விரதம் வருகிற நவம்பர் இரண்டாம் தேதி ஆரம்பிக்கிறது. கந்த சஷ்டி விரதம் முடிந்து ஏழாவது நாள் நவம்பர் 7ஆம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெறும். சூரசம்காரம் நடந்து முடிந்த பின்பு நவம்பர் எட்டாம் தேதி திருக்கல்யாணம் நடைபெறும். இந்த சஷ்டி விரதம் மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுகிறது. திருச்செந்தூர் மற்றும் அனைத்து முருகர் சன்னதிகளிலும் இந்த திருவிழா விசேஷமாக நடைபெறும்.
திருமணத்தடை நீங்கி மாங்கல்ய வரம் வேண்டுவோர் முக்கியமாக குழந்தை வரத்திற்காக ஏங்குவோர் இந்த சஷ்டி விரதம் கடைபிடிப்பது மிகவும் நல்லது. இது மட்டுமல்லாமல் தீராத பிரச்சனை தாங்க முடியாத துன்பம் தீராத நோய் ஆகியவற்றால் பாதிப்படைந்தவர்களும் இந்த சஷ்டி விரதத்தை மேற்கொள்ளலாம்.
சஷ்டி விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் ஒரு சிலர் பால் பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பார்கள். ஒரு சிலர் துளசி இலை மட்டுமே சாப்பிட்டு விரதம் இருப்பார்கள். ஒரு சிலர் ஒருவேளை மட்டும் உணவு உண்டு விரதம் இருப்பார்கள். அவரவர் உடலுக்கு தகுந்தார் போல் விரதாம் இருப்பார்கள். ஆனால் இதில் முக்கியமானது முருகப்பெருமானின் மீது முழு நம்பிக்கை வைத்து அவரையே அனுதினமும் நினைத்து இருப்பது தான் இந்த விரதத்தின் நோக்கம் ஆகும்.
கந்த சஷ்டி திருச்செந்தூரில் தொடங்கிய பிறகு 7 நாட்கள் விரதம் இருக்க வேண்டும். திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்த பின்பு விரதத்தை நிறைவு செய்வதுதான் வழக்கம். ஆனால் முடியாதவர்கள் சஷ்டியின் இறுதி நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை மனதார வேண்டிக் கொள்ளலாம்.
இது மட்டுமல்லாமல் இந்த பெரிய சஷ்டி நாளிலிருந்து விரதம் ஆரம்பிப்பவர்கள் அடுத்தடுத்து மாதங்களில் வரும் சஷ்டி அன்று தவறாமல் விரதம் கடைப்பிடித்து வரும் பொழுது மறுவருடம் இந்த மகா சஷ்டி தினத்திற்குள் அவர்களுக்கு கட்டாயம் குழந்தை பாக்கியம் கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை. அதனால் நம் கஷ்டங்களை மனதார முருகப்பெருமானிடம் ஒப்படைத்து தங்களது வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று விரும்புவர்கள் இந்த சஷ்டி விரதத்தை மேற்கொள்ளும் போது கண்டிப்பாக அந்த முருகப்பெருமாள் அருள் ஆசி புரிவார்.