ஐதராபாத்தில் தனது மனைவியைக் கொன்றுவிட்டு, சமூக வலைதளத்தில் உருக்கமான ஸ்டேட்டஸ் வைத்த கார் டிரைவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டத்தைச் சேர்ந்த ஆஞ்சநேயுலு, தனது மனைவி சரஸ்வதியின் நடத்தையில் சந்தேகப்பட்டதாலும், குடும்பத்தில் நிலவிய கடும் நிதி நெருக்கடி காரணமாகவும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கார் டிரைவரான அவர் வேலையை விட்டுவிட்டு ஊதாரித்தனமாகச் சுற்றியதால், சரஸ்வதி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, தான் திருந்திவிடுவதாகக் கூறி மனைவியையும் குழந்தைகளையும் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்த ஆஞ்சநேயுலு, நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த சரஸ்வதியின் தலையில் கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். தாயின் உடலருகே இரத்தம் படிந்த ஆடைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளிடம், “உங்கள் தாய் தூங்குகிறாள், நீங்களும் தூங்குங்கள்” என்று கூறிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர் விளக்கைப்போட்டுப் பார்த்த குழந்தைகள், தாய் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அலறித் துடித்தனர்.
கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய ஆஞ்சநேயுலு, தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், “என் உயிரில் பாதியாக இருந்த உன்னை நானே என் கைகளால் கொன்றுவிட்டேனே” என்று பதிவிட்டுள்ளார். இது குறித்துத் தகவல் அறிந்த போலீசார், சரஸ்வதியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள ஆஞ்சநேயுலுவைத் தேடி வரும் போலீசார், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
