நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு எடுத்து வரும் அரசியல் நகர்வுகள் தற்போது விவாதப் பொருளாகியுள்ளன. அக்கட்சி கூட்டணி அமைப்பதில் ‘கோட்டை விடுகிறதா?’ என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. குறிப்பாக, திமுக மற்றும் அதிமுக போன்ற பிரதானக் கட்சிகள் ஏற்கனவே வலுவான கூட்டணிகளைத் தக்கவைத்துள்ள நிலையில், தவெக ‘தனித்துப் போட்டி’ அல்லது ‘ஆட்சியில் பங்கு’ என்ற உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், களத்தில் மற்ற கட்சிகளைத் தன்பக்கம் ஈர்ப்பதில் இன்னும் ஒரு தெளிவான பிம்பத்தை உருவாக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.
இண்டியா கூட்டணியில் DMK + INC + VCK + LEFT + MDMK + MNM + IUML கட்சிகளும், NDA கூட்டணியில் BJP + AIADMK + PMK + AMMK + TMC+ IJK + TMMK கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. தேர்தல் அரசியலில் கூட்டணி முக்கியமானவை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என கூறியும், இதுவரை தவெகவுடன் யாரும் கூட்டணி அமைக்கவில்லை. தேமுதிக, உள்ளிட்ட சில கட்சிகள் மட்டுமே கூட்டணியை உறுதி செய்யாமல் இருக்கும் நிலையில், TVK தனித்துவிடப்பட்டுள்ளதா என கேள்வி எழுந்துள்ளது.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்குள்ளேயே தவெக-வுடன் கூட்டணி வைப்பது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. ஒரு தரப்பு தவெக-வை ஒரு மாற்றாகக் கருதினாலும், மற்றொரு தரப்பு இன்னும் திமுக கூட்டணியிலேயே நீடிக்க விருப்பம் தெரிவிக்கிறது. தவெக தலைவர் விஜய், பாஜக-வை கொள்கை எதிரியாகவும் திமுக-வை அரசியல் எதிரியாகவும் அறிவித்துள்ள நிலையில், அதிமுக-வையும் விமர்சிக்கத் தொடங்கியிருப்பது அக்கட்சிக்கான கூட்டணி வாய்ப்புகளைக் குறைப்பதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இதுவே தவெக கூட்டணி விஷயத்தில் சறுக்கலைச் சந்திக்கிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறதுஇருப்பினும், தவெக தரப்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு மற்றும் பிரசாரக் குழுக்கள் அமைக்கப்பட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. “ஆட்சியில் பங்கு” என்ற முழக்கத்தின் மூலம் சிறிய கட்சிகளைத் தன்பக்கம் இழுக்க விஜய் முயற்சி செய்து வருகிறார். மக்கள் செல்வாக்கும், இளைஞர்களின் ஆதரவும் தங்களுக்குப் பெரும் பலமாக இருக்கும் என்றும், சரியான நேரத்தில் கூட்டணி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தவெக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்..
