மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய “எல்பிஜி திருத்த அரசாணை 2026”-ன் படி, குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்பு உள்ளவர்கள் இனி வீட்டு உபயோக LPG சிலிண்டர் இணைப்பை வைத்திருக்க முடியாது. ஒரு நபர் ஒரே நேரத்தில் PNG மற்றும் LPG ஆகிய இரண்டு இணைப்புகளையும் வைத்திருப்பது தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் பைப் கேஸ் வசதி இருந்து நீங்கள் அதைப் பெற்றிருந்தால், பழைய LPG இணைப்பை உடனடியாகச் சரண்டர் செய்ய வேண்டும்.
பைப் கேஸ் வசதி உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, விநியோகஸ்தர்கள் மூலம் அறிவிப்பு அனுப்பப்படும். அந்த அறிவிப்பு கிடைத்த 90 நாட்களுக்குள் நீங்கள் பைப் கேஸ் இணைப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த காலக்கெடுவிற்குள் மாறத் தவறினால், உங்கள் வீட்டிற்கு வழங்கப்படும் சிலிண்டர் விநியோகம் தானாகவே நிறுத்தப்படும். இருப்பினும், தொழில்நுட்பக் காரணங்களால் உங்கள் வீட்டிற்குப் பைப் கேஸ் வழங்க முடியாது என்று நிறுவனம் சான்றிதழ் (NOC) அளித்தால் மட்டுமே சிலிண்டர் விநியோகம் தொடரும்.
அரசின் புதிய வழிகாட்டுதல்களின்படி, எல்பிஜி இணைப்புகளுக்கு eKYC சரிபார்ப்பு தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த அங்கீகாரம், எல்பிஜி இணைப்புகளின் தவறான பயன்பாட்டைத் தடுக்கவும், முறையான வாடிக்கையாளர்களைச் சரிபார்க்கவும் உதவுகிறது. பொது வாடிக்கையாளர்கள் ஒரு முறையும், உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகள் நிதியாண்டிற்கு ஒரு முறையும் இந்த eKYC-யை முடிக்க வேண்டும். இதை மொபைல் செயலிகள் அல்லது விநியோகஸ்தர் அலுவலகம் மூலம் எளிதாகச் செய்து கொள்ளலாம்.
மேலும், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் முறைகேடுகளைத் தவிர்க்க, சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியும் மாற்றப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் ஒரு சிலிண்டர் பதிவு செய்த பிறகு அடுத்த சிலிண்டரை 25 நாட்கள் கழித்தே பதிவு செய்ய முடியும். இதுவே கிராமப்புறங்களில் 45 நாட்கள் இடைவெளியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஒரு வாடிக்கையாளர் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மேல் சிலிண்டர் முன்பதிவு செய்யவில்லை என்றால், அந்த இணைப்பு செயலற்றதாகக் கருதப்பட்டு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது.
