விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டி பகுதியில் தனியார் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம்போல் இந்த கடை திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வந்தது. அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், மதுபான கடையின் வெளிச்சுவர் மற்றும் உள்பகுதி என அடுத்தடுத்து மூன்று இடங்களில் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இந்த எதிர்பாராத தாக்குதலில், கடையில் வேலை பார்த்து வந்த மாயன் (34) என்ற ஊழியர் படுகாயமடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்த கூமாபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த ஊழியரை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து, கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்ததோடு, கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் தப்பியோடிய நபர்களை வலைவீசி தேடத் தொடங்கினர். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பகல் நேரத்தில் அரங்கேறிய இந்த வெடிகுண்டு வீச்சு சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மதுபான கடை வளாகத்தில் மூன்று நபர்கள் மது அருந்தியபோது அங்கிருந்த ஊழியர்களுடன் திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இந்த ஆத்திரத்தில், அவர்கள் காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதற்காகப் பயன்படுத்தப்படும் ‘அவுட்டுக்காய்’ எனப்படும் நாட்டு வெடிகுண்டுகளை கடையின் சுவர்கள் மீது வீசிவிட்டு தப்பியோடியது அம்பலமாகியுள்ளது. தலைமறைவாக உள்ள அந்த மூன்று நபர்களையும் பிடிப்பதற்காக போலீசார் தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர்.
