ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும் மாணவிகளுக்கும் இடையே திடீரெனக் மோதல் ஏற்பட்டது. வடகிழக்கு மாநில மாணவி ஒருவரின் கைபேசி காணாமல் போனதே இந்தச் சம்பவத்திற்கு முக்கியக் காரணமாகும். இது குறித்து எழுந்த வாக்குவாதம், விரைவில் தகராறாக மாறி இறுதியில் இருதரப்பினருக்கும் இடையே கைக்கலப்பாகவும் வன்முறை மோதலாகவும் உருவெடுத்தது.
இந்த மோதலின் போது கல்லூரி நிர்வாகமும் உள்ளூர் ஊழியர்களும் தங்களின் புகார்களைக் கேட்காமல், உள்ளூர் மாணவிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக வடகிழக்கு மாநில மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தங்களுக்கு நியாயமான விசாரணை கிடைக்கவில்லை என்றும் அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியதால், நிலைமையைக் கட்டுப்படுத்த நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காக, வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 31 மாணவிகள் வேறு ஒரு விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மணிப்பூர் மாநிலத் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளதோடு, ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு வடகிழக்கு மாநில மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
