திருமணம் கேட்டதால் விபரீதம்… பார்சலில் போன உடல்… பாத்திரத்தில் வெந்த தலை… சினிமா காட்சியை மிஞ்சிய கூடுவாஞ்சேரி பயங்கரம்…!!

By Gayathri on ஆவணி 23, 2026

Spread the love

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்றில் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு சடலம் மீட்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில், ஒரு இளைஞரும் இளம்பெண்ணும் அந்தப் பெட்டியைக் கொண்டு வந்ததும், பின்னர் அவர்கள் சூட்கேஸ் இல்லாமல் திரும்பிச் சென்றதும் பதிவாகியிருந்தது. அவர்களின் பயணத் தடயங்களை வைத்து விசாரித்தபோது, அவர்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து புறநகர் ரயில் மூலமாக சென்னைக்கு வந்திருப்பது உறுதியானது.

கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு வீட்டில் காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அந்த வீட்டின் அறையில் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் பல்வேறு உடல் பாகங்கள் பாத்திரத்தில் வைத்து கொடூரமாக வேகவைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சடலத்தின் ஒருசில பாகங்களை மட்டும் வீட்டிலேயே மறைத்து வைத்துவிட்டு, மீதமுள்ள உடல் பாகங்களை சூட்கேஸில் அடைத்து அந்த இளம் ஜோடி ரயிலில் பார்சலாக அனுப்பி வைத்தது விசாரணையில் அம்பலமானது.

   

உயிரிழந்த 45 வயது பெண்ணுக்கும் அந்த 26 வயது இளைஞருக்கும் இடையே இருந்த தகாத உறவே இக்கொலைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அப்பெண் வற்புறுத்தியதால், ஆத்திரமடைந்த இளைஞர் தனது காதலியுடன் இணைந்து இந்த கொடூரச் செயலை செய்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், நகை அல்லது பணத்துக்காக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆக்ராவிலும் கூடுவாஞ்சேரியிலும் மீட்கப்பட்ட உடல் பாகங்கள் ஒரே பெண்ணுடையதுதானா என்பதை உறுதிசெய்ய தடயவியல் சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், கொலையாளிகள் குறித்த முழு பின்னணியையும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.