தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எழுச்சி ஆளுங்கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு தரப்பிற்கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக பெரம்பூர், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, அம்பத்தூர் மற்றும் ஆவடி ஆகிய ஐந்து தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் மிகத்தீவிரமான களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கிகள் தவெக பக்கம் சாயும் பட்சத்தில், பல தொகுதிகளில் முடிவுகள் தலைகீழாக மாற வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
கட்சியின் தலைவர் விஜய், 233 தொகுதிகளில் வேட்பாளர்களைக் களமிறக்கி சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நெல்லை, தூத்துக்குடி, காரைக்குடி மற்றும் கன்னியாகுமரி எனத் தமிழகம் முழுவதும் ரோடு ஷோ மற்றும் மக்கள் சந்திப்புகள் மூலம் அவர் ஏற்படுத்திய தாக்கம், நேற்று சென்னையில் நடைபெற்ற ரோடு ஷோவிலும் எதிரொலித்தது. எடப்பாடி தொகுதியில் மட்டும் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட சர்ச்சை எழுந்தாலும், மற்ற மாவட்டங்களில் வேட்பாளர்களுக்குக் கிடைத்து வரும் வரவேற்பு அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையின் முக்கியத் தொகுதியான பெரம்பூரில் திமுக வேட்பாளர் சேகருக்கு, தவெக வேட்பாளர் கடும் போட்டியை அளித்து வருகிறார். அதேபோல், மயிலாப்பூர் தொகுதியில் பாஜகவின் நட்சத்திர வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை விடவும், தவெகவின் பொருளாளர் வெங்கடரமணன் அதிக வாக்குகளைப் பெறுவார் எனச் சில கணிப்புகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சைதாப்பேட்டை தொகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியத்திற்கு எதிராக தவெக வேட்பாளர் அருள் பிரகாசம் களம் காண்பது, அங்கும் மும்முனைப் போட்டியை உருவாக்கியுள்ளது.
அம்பத்தூர் மற்றும் ஆவடி ஆகிய தொகுதிகளிலும் தவெகவின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆவடியில் அமைச்சர் நாசருக்கு எதிராக பாஜக மற்றும் தவெக வேட்பாளர்கள் மோதுகையில், தவெக வேட்பாளர் ரமேஷ் குமார் தொகுதிக்குள் தீவிரமாகச் சுழன்று வருவது மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, அதிமுக நேரடியாகப் போட்டியிடாத அல்லது வலுவிழந்து காணப்படும் இடங்களில் தவெகவின் ஆதிக்கம் அதிகரித்திருப்பது, வரும் தேர்தலில் அக்கட்சி ஒரு முக்கிய சக்தியாக உருவெடுப்பதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
