தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகள் ரேவதிக்கும் (24), ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் (25) காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஓராண்டாக ரேவதி தனது 10 மாதக் குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் சுரேஷ்குமார் ஒரு பாட்டிலில் பெட்ரோலுடன் ரேவதியின் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.
ஆத்திரமடைந்த சுரேஷ்குமார், ரேவதி, அவரது தாயார் மற்றும் பச்சிளம் குழந்தை ஆகியோர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளார். அப்போது சாமர்த்தியமாகச் செயல்பட்ட ரேவதியும் அவரது தாயாரும், உடனே வீட்டின் கதவைப் பூட்டிக்கொண்டு பின்கதவு வழியாகக் குழந்தையுடன் தப்பித்து உயிர் பிழைத்தனர். இதனால் மேலும் ஆத்திரமுற்ற சுரேஷ்குமார், வீட்டின் முன் நின்றிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.
வாகனங்கள் எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலை முயற்சியில் ஈடுபட்ட சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத் தகராறில் மனைவியையும் குழந்தையையும் உயிரோடு எரிக்க முயன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
