நாசிக் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தின் பிபிஓ பிரிவில் பெண் ஊழியர்களுக்கு எதிராக அரங்கேறியுள்ள பாலியல் மற்றும் மத ரீதியான அத்துமீறல்கள், கார்ப்பரேட் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022 முதல் 2026-ன் தொடக்கம் வரை திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தக் கொடுமைகளில், குறிப்பாகக் குடும்பப் பிரச்சனை மற்றும் கடும் பணத்தேவையில் இருந்த பெண் ஊழியர்களே குறிவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவி செய்வது போல நடித்து வலையில் வீழ்த்திய ஒரு கும்பல், நீண்ட காலமாக அவர்களைப் பாலியல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த விவகாரத்தில் எச்ஆர் (HR) பிரிவில் செல்வாக்கு மிக்கவராக இருந்த நிதா கான் என்ற பெண் அதிகாரியின் செயல்பாடு உச்சக்கட்டக் கொடுமையாகப் பார்க்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தபோது, அவற்றைக் குப்பைக்குத் தள்ளியதுடன், அவர்களை அச்சுறுத்தி பாலியல் வேட்டையாடுபவர்களிடம் சிக்க வைக்கும் பாலமாக இவர் செயல்பட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் மீது கடும் மத ரீதியான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகவும், இந்து தெய்வங்களை அவமதித்தல், அசைவ உணவுகளை உண்ணக் கட்டாயப்படுத்துதல் மற்றும் அலுவலகத்திலேயே நமாஸ் செய்ய வற்புறுத்துதல் எனத் திட்டமிட்ட மதமாற்ற முயற்சிகள் அங்கு அரங்கேறியுள்ளதும் எப்ஐஆர் (FIR) மூலம் தெரியவந்துள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவத்தை வெளிக்கொண்டு வர நாசிக் போலீசார் 40 நாட்கள் ரகசியமாகச் செயல்பட்டுள்ளனர். பெண் போலீசார் சாதாரண ஊழியர்களைப் போல அலுவலகத்திற்குள் ஊடுருவி ஆதாரங்களைத் திரட்டியதன் அடிப்படையில், தற்போது ஒன்பது முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனிஸ் ஷேக், தௌசிப் அத்தார் உள்ளிட்ட ஏழு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தௌசிப் அத்தார் என்பவர் ஒரு பெண் ஊழியரைத் திருமணம் செய்வதாக ஏமாற்றிப் பாலியல் பலாத்காரம் செய்துள்ள அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க மகாராஷ்டிரா அரசு 12 பேர் கொண்ட சிறப்பு விசாரணைத் தனிப்படையை (SIT) அமைத்துள்ளது.
தற்போது இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ள அவர், ஆர்த்தி சுப்ரமணியன் தலைமையில் உயர்மட்டக் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஐடி துறையில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள இந்தச் சம்பவம், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது உள்நாட்டுப் புகார் குழுக்களை (Internal Complaints Committee) மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது.
