“இப்போ வேண்டாம்…” – அதிமுக மாஜிக்களுக்கு ‘நோ’ சொன்ன விஜய்…! கடைசி நிமிடத்தில் பனையூரில் நடந்தது என்ன…?

By Swetha on ஆனி 29, 2026

Spread the love

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த, அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடனான சந்திப்பை தவெக தலைவர் விஜய் திடீரென ரத்து செய்துள்ளார். கடந்த தேர்தலில் அதிமுக சந்தித்த தோல்விக்குப் பிறகு, முன்னாள் அமைச்சர்கள் நடராஜன், ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, சம்பத் மற்றும் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்த மரகதம், இசக்கி சுப்பையா உள்ளிட்ட பலர் தவெகவில் இணைந்தனர். கட்சியில் இணைந்து நீண்ட நாட்களாகியும் விஜய்யை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்காததால், கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா மூலமாக நேற்று சனிக்கிழமை சென்னை பனையூர் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், எதிர்பாராத விதமாக நேற்று இயக்குனர் பாக்யராஜ் காலமானார். திரைத்துறையில் தனக்கு மிகவும் நெருக்கமான மற்றும் மூத்த ஆளுமையான அவரது மறைவுச் செய்தியைக் கேட்டு மிகுந்த சோகத்திற்குள்ளான விஜய், அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டியிருந்ததால் நேற்று திட்டமிடப்பட்டிருந்த அரசியல் சந்திப்புகள் அனைத்தையும் அதிரடியாக ரத்து செய்தார். இதனால் விஜய்யை நேரில் சந்திக்க மிகுந்த ஆவலோடு சென்னை வந்திருந்த முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர். இருப்பினும், இந்தச் சந்திப்பு தற்காலிகமாக மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், அடுத்த சில நாட்களில் மாற்றுத் தேதி ஒதுக்கப்பட்டு இந்தச் சந்திப்பு உறுதியாக நடக்கும் என்றும் தவெக தலைமை தெரிவித்துள்ளது.

   

மறுபுறம், தமிழ்நாட்டில் அதிமுகவினர் பலரும் வரிசையாக கட்சியை விட்டு வெளியேறி திமுக மற்றும் தவெகவை நோக்கி நகர்ந்து வரும் சூழலில், அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் விரைவில் விஜய் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைய உள்ளார் அதற்கான ஆயத்த பணிகளைச் செய்து வருகிறார். அவர் தவெகவில் இணையும் அதே தருணத்தில், ஏற்கனவே கட்சியில் இணைந்து காத்திருக்கும் மற்ற முன்னாள் அதிமுக தலைவர்களையும் விஜய் நேரில் சந்தித்துப் பேசுவார் என்று அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.