இனி தமிழ்நாட்டில் இது நடக்காது… அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் போட்ட ‘ஸ்ட்ரிக்ட்’ உத்தரவு…. கனிமக் கடத்தலுக்கு செக் வைத்த தமிழக அரசு…!

By Nanthini on ஆனி 5, 2026

Spread the love

தமிழகத்தில் கனிம வளங்களை அறிவியல் ரீதியாகவும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும் நிர்வகிப்பது குறித்த முக்கிய ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. தமிழக முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநிலத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது மற்றும் வருவாயைப் பெருக்குவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கனிமவள மேலாண்மையில் தமிழ்நாட்டை நாட்டின் முன்னணி மாநிலமாக மாற்றும் நோக்கில், புவியியல் மற்றும் சுரங்கத் துறை மேற்கொண்டு வரும் பல்வேறு பணிகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து உயர் அதிகாரிகள் முதல்வரிடம் விளக்கமளித்தனர்.

   

இந்த ஆய்வுக் கூட்டத்தில், கனிமக் குவாரிகளின் எல்லைகளைத் துல்லியமாகக் கண்காணிக்கவும், அங்கிருந்து எடுக்கப்படும் கனிமங்களின் அளவைச் சரியாக மதிப்பிடவும் ஆளில்லா விமான (ட்ரோன்) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், சட்டவிரோத கனிமக் கடத்தலை முற்றிலுமாகத் தடுக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களை கையாள்வது மற்றும் அரசின் கனிம வருவாயை சட்டப்பூர்வமாக அதிகரிக்கும் புதிய வழிமுறைகள் குறித்தும் கூட்டத்தில் விரிவான திட்டங்கள் எடுத்துரைக்கப்பட்டன.

   

இயற்கை வளங்களை எதிர்கால நீடித்த வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய முதல்வர் விஜய், சட்டவிரோத கனிமக் கடத்தலைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த உயர்மட்டக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், இயற்கை வளங்கள்துறை அமைச்சர் டி.கே. பிரபு, நிதி அமைச்சர் நெ. மரிய வில்சன், தலைமைச் செயலாளர் மு. சாய்குமார் மற்றும் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.