ஐடி நிறுவனங்களில் மத ரீதியான துன்புறுத்தல்களும், கட்டாய மதமாற்ற முயற்சிகளும் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில், இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோவின் (Wipro) புனே ஹிஞ்சவாடி வளாகத்தில் பணியாற்றிய பெண் புராஜெக்ட் மேனேஜர் ஒருவர், சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் தன்னை இஸ்லாம் மதத்திற்கு மாறச் சொல்லி கடுமையான உளவியல் அழுத்தம் கொடுத்ததாகப் புகார் அளித்துள்ளார். 2019 முதல் 2025 வரை அங்கு பணியாற்றிய அவர், இந்த மத ரீதியான டார்ச்சர்களை எதிர்த்தபோது, “உன்னுடைய பெர்ஃபார்மன்ஸ் சரியில்லை, வேலையை விட்டு தூக்கிவிடுவோம்” என மேலாளர்கள் மிரட்டியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, அவர் தனது பணியை ராஜினாமா செய்ய நேரிட்டுள்ளது.
நிறுவனத்தின் உள்ளக விசாரணை குழு (Internal Committee) இந்த விவகாரத்தில் முறையான நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்ட பெண் தற்போது மகாராஷ்டிர மாநில மனித உரிமைகள் ஆணையம் மற்றும் புனே காவல்துறையிடம் புகாரளித்துள்ளார். இது குறித்துப் பேசிய புனே போலீஸ் அதிகாரி பாலாஜி பந்தரே, இன்சூரன்ஸ் பிரிவில் பணிபுரிந்த ஒரு சக பெண் ஊழியர், புகார்தாரரை மத ரீதியாக இழிவுபடுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும், தற்போது பெங்களூரில் இருக்கும் அந்த ஊழியரிடமும், விப்ரோ நிர்வாகத்திடமும் தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, தங்களுக்கு ஊழியர்களின் கண்ணியமே முக்கியம் என்றும், போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் விப்ரோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இதே போன்றதொரு அதிரவைக்கும் சம்பவம் சில காலத்திற்கு முன்பு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தின் நாசிக் கிளையிலும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது. அங்கிருந்த பெண் ஊழியர்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சிகள் குறித்து அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தனர். இந்த விவகாரம் பெரும் பூதாகரமானதை அடுத்து, டிசிஎஸ் நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. காவல்துறையின் தலையீட்டிற்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட ஊழியர்கள் பலர் கைது செய்யப்பட்டதோடு, அவர்கள் நிறுவனத்தில் இருந்தும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
தொடர்ச்சியாக முன்னணி ஐடி நிறுவனங்களில் அரங்கேறும் இத்தகைய சம்பவங்கள், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் மத சுதந்திரம் குறித்தப் பெரும் விவாதத்தையும் அச்சத்தையும் எழுப்பியுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் உள்விவகாரக் குழுக்களை வலுப்படுத்துவதோடு, பணியிடங்களில் மதச்சார்பின்மையையும், ஊழியர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும். சகிப்புத்தன்மையற்ற இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் மட்டுமே, லட்சக்கணக்கான ஊழியர்கள் நிம்மதியோடும் பாதுகாப்பு உணர்வோடும் பணியாற்ற முடியும்.
