முந்தைய தி.மு.க. ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, “விஞ்ஞான முறையில்” மிகப்பெரிய அளவில் ஊழல் செய்துள்ளதாக தற்போதைய மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மின்வாரியத்திற்குத் தேவையான உபகரணங்களைக் கொள்முதல் செய்ததில் இந்த முறைகேடு நடந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சந்தையில் வெறும் ரூ.8 லட்சம் மதிப்புள்ள டிரான்ஸ்பார்மர்களை (மின்மாற்றிகள்), தலா ரூ.13 லட்சத்திற்கு மிகக் கூடுதல் விலை கொடுத்து மின்வாரியம் வாங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த மின்மாற்றி கொள்முதல் முறைகேடு தொடர்பாக ஏற்கனவே நீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ. (CBI) விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இதில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் நபர்கள் மீது தவெக அரசு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே, டெண்டர் ஆவணங்கள் மற்றும் முக்கியத் தரவுகள் அடங்கிய 20-க்கும் மேற்பட்ட மின்வாரிய ‘ஹார்டு டிஸ்க்குகள்’ (Hard Disks) தலைமை அலுவலகத்தில் இருந்து திருடப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது. இந்தத் திருட்டுச் சம்பவத்தின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்பு இருக்கலாமா என்ற சந்தேகங்கள் கிளப்பப்படும் நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்குச் செந்தில் பாலாஜி திடீர் விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தை வேண்டுமென்றே பூதாகரமாக்க முயற்சிப்பதாகக் கூறியுள்ள அவர், மின்மாற்றி கொள்முதலில் அரசுக்கு எந்தவித இழப்பும் ஏற்படவில்லை என்றும், கடந்த 1987-ஆம் ஆண்டு முதல் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதே போன்ற டெண்டர் முறையே தங்களின் ஆட்சியிலும் தொடரப்பட்டது என்றும் கூறி அமைச்சர் நிர்மல் குமாரின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
