ரியல் சிங்கப்பெண்..! ICU வார்டில் பயங்கரத் தீ விபத்து.. ஆக்சிஜன் மாஸ்க்கைக் கழற்றி எறிந்து 20 உயிர்களைக் காப்பாற்றிய 95 வயது பாட்டி.. நடந்தது என்ன..?

By Swetha on ஆனி 5, 2026

Spread the love

பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள பிரபல பிரசாத் மருத்துவமனையின் அவசரச் சிகிச்சை பிரிவில் (ICU) ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் சிக்கிய 20-க்கும் மேற்பட்ட நோயாளிகளை 95 வயது மூதாட்டி ஒருவர் தனது அசாதாரண துணிச்சலால் காப்பாற்றியுள்ளார். மருத்துவமனையின் 5-வது மாடியில் நள்ளிரவு 3:30 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் கரும்புகை சூழ்ந்து மூச்சுத்திணறல் காரணமாக 4 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பெரும் சோகத்தை ஏற்படுத்திய இச்சம்பவத்தின் இடையே, அங்குச் சிகிச்சையில் இருந்த சப்ரா மேக் பகுதியைச் சேர்ந்த ராதா தேவி என்ற 95 வயது பாட்டி காட்டிய அசாத்திய மனதிடமும், சமயோசித புத்தியும் ஒட்டுமொத்த நாட்டையும் நெகிழ்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

சுவாசம் மற்றும் குறைந்த ரத்த அழுத்தப் பிரச்சினை காரணமாக ஆக்சிஜன் உதவியுடன் அந்த வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ராதா தேவி பாட்டி, நள்ளிரவில் தீப்பிடித்ததும் அறை முழுவதும் நச்சுப் புகை சூழ்வதைக் கண்டார். இத்தகைய இக்கட்டான சூழலிலும் சற்றும் பதற்றமடையாமல், தனது முகத்தில் இருந்த ஆக்சிஜன் மாஸ்க்கையும் கைகளில் இருந்த குளுக்கோஸ் (சலைன்) ஊசியையும் அவரே தைரியமாக இழுத்துக் கழற்றி எறிந்தார். பின்னர் தட்டுத்தடுமாறி அடர்ந்த புகையைத் தாண்டி வெளியே ஓடிவந்து, அங்கிருந்த பாதுகாப்பு ஊழியரிடம் தீ விபத்து குறித்து சத்தம்போட்டு அலறித் தகவல் கொடுத்தார். இவரது துரித எச்சரிக்கையைத் தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்களும் மீட்புக் குழுவினரும் உடனடியாகச் செயல்பட்டு இதர நோயாளிகளைப் பத்திரமாக வெளியேற்றியதால், பல உயிர்கள் பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டன.