32% கம்மி… ரூ.3.78 கோடிக்கு டெண்டர்…. போட்டியை அள்ளிய ராசி பில்டர்ஸ்… பின்னணியில் இருக்கும் சீக்ரெட்…. ஜோசியர் சொன்ன ஒரே ஒரு வார்த்தையால் விஜய் எடுத்த அதிரடி முடிவு….!

By Nanthini on புரட்டாதி 4, 2026

Spread the love

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் அலுவலகத்தை புதுப்பிக்கும் பணிக்கான டெண்டர், ராசி பில்டர்ஸ் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.5.54 கோடி மதிப்பீட்டில் அளிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு 5 நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில், மதிப்பீட்டுத் தொகையை விட 32% குறைவாக, அதாவது ரூ.3.78 கோடிக்கு டெண்டர் கோரி ராசி பில்டர்ஸ் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தைக் கைப்பற்றியுள்ளது. முன்னதாக தகுதிச் சுற்றிலேயே ஒரு நிறுவனம் வெளியேறிய நிலையில், ஈஸ்வரி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், ஸ்ரீ ராகவேந்திரா பில்டர்ஸ் மற்றும் கியூப் இன்ஃப்ரா ஆகிய நிறுவனங்களை விடக் குறைந்த தொகையைக் குறிப்பிட்டு ராசி பில்டர்ஸ் இறுதி வெற்றியைப் பெற்றுள்ளது.

தலைமைச் செயலகத்தில் இயங்கி வரும் முதலமைச்சர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றும் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக முதலமைச்சர் விஜய், கடல் காட்சியைப் பார்க்கும் வகையில் அமைந்த 10-வது மாடியிலிருந்து செயல்பட வேண்டும் என அவரது ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வழங்கிய ஆலோசனையின் பேரிலேயே இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது. நல்லி சில்க்ஸ், மேனகா கார்ட்ஸ் மற்றும் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அனில் ரெட்டி போன்ற முக்கியப் பிரமுகர்களை வாடிக்கையாளர்களாகக் கொண்ட ராசி பில்டர்ஸ் நிறுவனம் இப்பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகிறது.

   

முன்னதாக, இத்திட்டம் தொடர்பாக வெளியிலும் சமூக வலைதளங்களிலும் சில சர்ச்சைகள் எழுந்தன. ஜூலை மாத இறுதியிலேயே நாமக்கல் கவிஞர் மாளிகையில் புதுப்பித்தல் பணிகள் தொடங்குவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி, ‘டெண்டர் விடப்படாமலேயே பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன?’ என்ற கேள்விகள் கிளம்பின. ஆனால், தவெக அமைச்சர்கள் அத்தகைய பணிகள் எதுவும் நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்தனர். இந்தச் சூழலில், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆகஸ்ட் மாதத்தின் 3-வது வாரத்தில் பொதுப்பணித்துறை அதிகாரப்பூர்வமாக டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது.

   

அரசு வெளியிட்ட டெண்டர் அறிவிப்பின்படி, நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் தொகுதி 1-க்கு ரூ.2.41 கோடி, தொகுதி 2-க்கு ரூ.2.01 கோடி மற்றும் தொகுதி 3-க்கு ரூ.1.12 கோடி என மொத்தம் ரூ.5.54 கோடி மதிப்பீட்டுத் தொகை நிர்ணயிக்கப்பட்டது. பொதுப்பணித்துறையில் பதிவு செய்த ஒப்பந்ததாரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற விதியின் கீழ் நடத்தப்பட்ட இப்போட்டியில் தேர்வாகியுள்ள ராசி பில்டர்ஸ் நிறுவனம், அடுத்த 3 மாதங்களுக்குள் அனைத்துப் புதுப்பிப்புப் பணிகளையும் முழுமையாக முடித்து அலுவலகத்தை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.