தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு பக்கம் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை என மும்முரமாக செயல்பட்டு வருகிறார்கள். இதனிடையே விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது.
அதே சமயம் சமீபத்தில் நடந்த கரூர் துயரத்தில் விஜய்க்கு சட்டரீதியாக பல சிக்கல்கள் வந்த நிலையில் அதனை பொறுமையாக கையாண்டு மீண்டும் கட்சியை மீட்டெடுத்துள்ளார். அடுத்தடுத்து கட்சியை வலுப்படுத்துவதற்கான பணிகளை விஜய் தீவிரப்படுத்தி உள்ளார். சமீபத்தில் கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் சந்தித்து பேசி இருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் கட்சியின் அரசியல் பணிகள் வேகம் எடுத்துள்ளது.
இந்நிலையில் வருகின்ற நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக்கழகம் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பொதுக்குழுவில் தேர்தல் சின்னமாக எதை தேர்வு செய்யலாம் என்பதை ஆலோசித்து முடிவு செய்து தீர்மானம் போட விஜய் முடிவு எடுத்துள்ளாராம். மேலும் திமுகவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பான ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
