2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் மற்றும் அனல் பறக்கும் தேர்தல் பரப்புரைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதிமுக சார்பில் சிவகாசி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, தனது தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், “தமிழகத்தில் திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி” என்று விஜய் பேசியது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த ராஜேந்திர பாலாஜி, நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சுகளைக் கடுமையாக விமர்சித்தார். “பள்ளியில் ஐஸ்கிரீம் சாப்பிடும் சிறுவர்களைப் போல விஜய் விளையாட்டுத்தனமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்” என்று கூறிய அவர், சினிமாவில் வேண்டுமானால் ஆக்ஷன் மற்றும் காமெடி எடுபடும், ஆனால் அரசியலில் விஜய்யின் நடிப்பு எடுபடாது என்று தெரிவித்தார். மேலும், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் வாக்காளர்கள் விஜய்யை ஒரு வேடிக்கைப் பொருளாகப் பார்க்கத் தொடங்கிவிட்டதாகவும் அவர் சாடினார்.
தமிழக அரசியலில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு சிங்கங்களுக்கு இடையேதான் உண்மையான போட்டி நிலவுகிறது என்பது உலகிற்கே தெரியும் என்று ராஜேந்திர பாலாஜி குறிப்பிட்டார். இதில் அதிமுகவே 100 சதவீதம் வெற்றி பெறும் என்பது மக்களின் கணிப்பாக உள்ளது என்றும், இதற்கு நடுவில் விஜய் தன்னை ஒரு போட்டியாளராகக் கருதுவது வேடிக்கையாக இருப்பதாகவும் அவர் கூறினார். விஜய்யை அரசியலில் ஒரு ‘ஜோக்கராகப்’ பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், தவெக வேட்பாளர்கள் பெரும் பின்னடைவைச் சந்திப்பார்கள் என்றும் கணித்தார்.
தன்னம்பிக்கை இல்லாத காரணத்தினாலேயே விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக விமர்சித்த ராஜேந்திர பாலாஜி, விஜய்யின் பேச்சுகளை ஒரு ‘ஜாலி மூட்’ பேச்சாகக் கருதி கடந்து போய்விட வேண்டும் என்றார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் பலமான கூட்டணி அமைந்துள்ளதால், நிச்சயமாக அவரே மீண்டும் முதலமைச்சராக வருவார் என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார். ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவை முன்னிட்டு அதிமுகவினர் களத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.
