பீகாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள சீத்லா மாதா கோவிலில் இன்று ஏற்பட்ட பயங்கர நெரிசலில் சிக்கி 8 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மாக்ரா பகுதியில் அமைந்துள்ள இக்கோவிலில், சைத்ர மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்த நிலையில், படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பீகார் ஷெரீப் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். போதிய பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை முறைப்படுத்தும் வசதிகள் இல்லாததே இந்தத் துயரச் சம்பவத்திற்கு காரணம் என உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவத்திற்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி ஆகியோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து மொத்தம் ₹6 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புக்குழுவினர் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு தலைமைச் செயலாளருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி தற்காலிகமாக கோவில் நடை சாத்தப்பட்டுள்ளது.
