ஹைதராபாத்தைச் சேர்ந்த சூர்யா பாய் என்பவர், தனது உடல் முழுவதும் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்து சமூக வலைதளங்களில் “ஓல்டு சிட்டி கோல்டு மேன்” என்ற பெயரில் அதிவேகமாகப் பிரபலமானார். தான் அணிந்திருக்கும் நகைகளின் மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று கூறி வந்த அவர், பொது நிகழ்ச்சிகளிலும் நேர்காணல்களிலும் பிரம்மாண்டமானச் சங்கிலிகள் மற்றும் மோதிரங்களுடன் தோன்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இவ்வளவு தங்கம் இவருக்கு எப்படி வந்தது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில், அவர் காட்டிய ஆடம்பரம் அனைத்தும் வெறும் வெற்றுப் பந்தா என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகள் சூர்யா பாயின் நகைகளை ஆய்வு செய்தபோது, அவர் அணிந்திருந்த 12 முக்கிய நகைகளில் பெரும்பாலானவை செம்பினால் செய்யப்பட்டு, அதன் மேல் தங்கப் பூச்சு அல்லது ரோடியம் பூச்சு பூசப்பட்ட போலி நகைகள் என்பது கண்டறியப்பட்டது. அவர் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ளதாகக் கூறிய நகைகளின் உண்மையான சந்தை மதிப்பு வெறும் 3 லட்சம் ரூபாய் மட்டுமே. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அவர் அணிந்திருந்த மொத்த நகைகளில் வெறும் 3 சவரன் மட்டுமே உண்மையான தங்கம் என்பதும், மற்றவை அனைத்தும் மங்கிப்போகக் கூடிய சாதாரணக் கவரிங் நகைகள் என்பதும் சோதனையில் உறுதியானது.
சமூக வலைதளங்களில் தன்னை ஒரு பெரும் செல்வந்தராகக் காட்டிக்கொள்ளத் திட்டமிட்ட சூர்யா பாய், இதற்காக 30-க்கும் மேற்பட்ட போலி நகைகளைப் பயன்படுத்தி வந்துள்ளார். அதிகாரிகளின் ஆழமான விசாரணையில், இவருக்குச் சொந்தமாகவோ அல்லது இவரது மனைவி பெயரிலோ எந்த நிலையான சொத்துக்களும் இல்லை என்பதும், அவர் மாதம் 20,000 ரூபாய் வாடகையில் ஒரு சாதாரணக் குடியிருப்பில் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும், கோழி இறைச்சிக் கடை மற்றும் உடற்பயிற்சி கூடம் நடத்துவதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 4.9 லட்சம் ரூபாய் மட்டுமே அவர் வருமானம் ஈட்டி வருவதும் அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே வருமான வரித் தாக்கல் செய்துள்ள சூர்யா பாய், தனது வருமான ஆதாரங்களை முறையாகச் சமர்ப்பிக்கவில்லை. தற்போது அவர் கைது செய்யப்படவில்லை என்றாலும், முறையற்ற வருமானத் தகவல் மற்றும் சொத்து விவரங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமூக வலைதளப் புகழுக்காகத் போலியான ஒரு பிம்பத்தை உருவாக்கி, சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள இந்த “கோல்டு மேன்” விவகாரம் தற்போது இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
