2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்து, வேட்புமனுத் தாக்கல் வரை முன்னேறியுள்ளது. இதில் உதயசூரியன் சின்னத்தில் 175 இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்களில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் (கன்னியாகுமரி), தஞ்சாவூர் மேயர் சண். ராமநாதன், ஓசூர் மேயர் சத்யா மற்றும் திருப்பூர் மேயர் தினேஷ் குமார் ஆகிய 4 சிட்டிங் மேயர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களது சட்டமன்றக் கனவு நனவாகுமா என்பது மே 4-ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.
அதே சமயம், சென்னை மாநகராட்சியின் இளம் பெண் மேயரான பிரியாவுக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழியில், மேயர் பதவியிலிருந்து சட்டமன்றத்திற்குள் நுழையத் திட்டமிட்ட பிரியா, தனது சொந்த தொகுதியான திரு.வி.க. நகரில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மூலம் இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், இறுதியில் கே.எஸ். ரவிச்சந்திரன் என்பவரே அந்தத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேயர் பிரியாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்குப் பின்னணியில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக, துணை மேயருடன் நிலவும் அதிகார மோதலால் மாநகராட்சிப் பணிகள் தாமதமாவது மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் இணைந்து செயல்படுவதில் உள்ள சுணக்கம் ஆகியவை தலைமையின் அதிருப்திக்குக் காரணமாகக் கருதப்படுகிறது. மேலும், அதே தொகுதியில் மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி வேட்பாளராகக் களமிறங்குவதும் ஒரு முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுகிறது. மேயர் பிரியாவின் பதவிக்காலம் இன்னும் ஓராண்டில் முடிவடைய உள்ள நிலையில், தற்போதைக்கு அவர் மாநகராட்சிப் பணிகளிலேயே தொடர திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
