VJ சித்ரா என்று அழைக்கப்படும் சித்ரா காமராஜ் தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் நடிகை ஆவார். மக்கள் டிவியில் ஆரம்பித்து தொடர்ந்து பல நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக சிறப்பாக தொகுத்து வழங்கிய சித்ரா அதன் மூலம் சின்னத்திரையில் விஜய் டிவியில் வாய்ப்பினை பெற்றார். சரவணன் மீனாட்சி, ஊர் சுத்தலாம் வாங்க, நொடிக்கு நொடி அதிரடி, என் சமையலறையில், டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றுவதன் மூலம் பிரபலமானார் சித்ரா.
அதற்குப் பிறகு விஜய் டிவியின் பிரபல தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பேரும் புகழும் பெற்றார் சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரம் என்றாலே சித்ரா ஞாபகம் தான் வரும். அந்த அளவுக்கு சித்ராவை முல்லை என்று மக்கள் கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். அந்த அளவுக்கு பிரபலமாக இருந்தார் சித்ரா. புகழின் உச்சியில் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த சித்ரா யாரும் எதிர்பாரா விதமாக 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நசரத்பேட்டையில் உள்ள ஒரு விடுதி அறையில் தங்கி இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது.
இது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவர் இறப்பதற்கு சில காலத்திற்கு முன்பு தான் பிரைவேட்டாக ஹேமந்த் என்பவருடன் சித்ராவுக்கு நிச்சயம் முடிந்து இருந்தது. தன் வருங்கால கணவருடன் தான் விடுதியில் தங்கியிருந்தார். அவர்தான் கொலை செய்துவிட்டார் என்று வழக்கு பதிவு ஆகி இருந்தது. ஹேமந்த் தரப்பில் சித்ராவும் தானும் நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு அக்டோபர் மாதம் ரிஜிஸ்டர் கல்யாணம் செய்து விட்டதாகவும் 2021 பிப்ரவரியில் கிராண்டாக திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் அவர் தரப்பில் கூறப்பட்டிருந்தது. நான்கு வருடங்கள் வழக்கு நடந்த நிலையில் சமீபத்தில் ஹேமந்தை விடுதலை செய்து தீர்ப்பளித்தது மகளிர் நீதிமன்றம்.
ஹேமந்த் விடுதலை செய்து வழக்கை நீதிமன்றம் முடித்த பிறகு தற்போது சித்ராவின் பெற்றோர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்கள். இந்நிலையில் திடீரென்று சித்ராவின் தந்தை தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். ஓய்வுபெற்ற காவலரான காமராஜ் சென்னை திருவான்மியூரில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். வீட்டில் அவரது அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்காததால் கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே சடலமாக தொங்கியுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.