தமிழ் சினிமாவில் கமர்ஷியல் சினிமாவின் உச்சமாக அமைந்தது ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பாட்ஷா திரைப்படம். 90 களில் ரஜினியின் மார்க்கெட் புதிய உச்சத்தைத் தொட்டது. அதில் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக அமைந்தது பாட்ஷா திரைப்படம். அந்த படத்தின் வெற்றியால் அதே திரைக்கதை பார்மட்டில் 10க்கும் மேற்பட்ட படங்கள் வெவ்வேறு நடிகர்களை வைத்து உருவாகின.
அதே போல ரஜினியை வைத்து அவர் இயக்கிய அண்ணாமலை திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதனால் 90 களில் மிகப்பெரிய கமர்ஷியல் இயக்குனராக வலம் வந்தவர் சுரேஷ் கிருஷ்ணா. ஆனால் அவரை இயக்குனராக அறிமுகமாக்கியது கமல்ஹாசன்தான்.
தன்னுடைய சத்யா படம் மூலமாக சுரேஷ் கிருஷ்ணா அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய ஹிட் இல்லை என்றாலும் இன்றளவும் கொண்டாடப்படும் ஒரு படமாக உள்ளது. இந்த படத்தை இயக்குவதற்கு முன்பாக சுரேஷ் கிருஷ்ணா பாலச்சந்தரிடம் பல படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார்.
அப்போது அவரின் வேலை செய்யும் திறனைக் கவனித்த கமல்ஹாசன் அவருக்கு இந்த படத்தை இயக்கும் பொறுப்பைக் கொடுத்துள்ளார். அதன் பிறகு 90 களில் அவர் நடிகர்கள் விரும்பும் இயக்குனராக மாறினார். பாட்ஷா என்ற இண்டஸ்ட்ரி ஹிட் படத்தைக் கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா அடுத்து ஆஹா என்ற குடும்பப் படத்தை இயக்கினார்.

அந்த படத்தில் முதலில் அஜித்தைதான் நடிக்கவைக்கவேண்டுமென ஆசைப்பட்டுள்ளார். இதுபற்றி பேசியுள்ள சுரேஷ் கிருஷ்ணா “அஜித்தை சந்தித்து கதை சொன்னேன். அப்போது அஜித் வரிசையாக நான்கு படங்கள் கமிட்டாகி இருந்தார். அதனால் அவர் பண்ணவில்லை. ஆனால் அந்த படத்தில் நடித்த ராஜீவ் கிருஷ்ணாவை அஜித்தான் அறிமுகப் படுத்திவைத்தார். அவர்கள் இருவரும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள்.” எனக் கூறியுள்ளார்.
