தமிழக முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த மே 10ஆம் தேதி பதவியேற்றதைத் தொடர்ந்து, தவெக தரப்பில் 9 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர். சுமார் ஒரு வார காலமாக இவர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்படாமல் இருந்த நிலையில், இன்று நிதி, நீர்வளம், கனிமவளம், பொதுப்பணி, சுகாதாரம், பள்ளிக்கல்வி மற்றும் தொழில்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் அந்த 9 அமைச்சர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனால் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த இலாகாக்கள் குறித்த எதிர்பார்ப்பு ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.
இருப்பினும், பத்திரப்பதிவு, போக்குவரத்து, இந்துசமய அறநிலையத்துறை, வீட்டுவசதி, உயர்கல்வி மற்றும் கூட்டுறவு போன்ற மிக முக்கிய துறைகளுக்கு இன்னும் அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. இந்த முக்கிய துறைகள் காலியாக வைக்கப்பட்டுள்ளதால், அடுத்த சில நாட்களில் தமிழக அமைச்சரவை அதிகாரப்பூர்வமாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது என்பது தெளிவாகிறது. இதற்கான அடுத்தகட்ட திட்டமிடல் பணிகளில் முதல்வர் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அமைச்சரவை விரிவாக்கத்தின் போது காங்கிரஸ் மற்றும் அதிமுகவின் ஒரு தரப்பினர் விஜய்யின் அமைச்சரவையில் இடம்பெறப் போவதாகத் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தை சூடாக்கியுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இதனை உறுதிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரும் ஏற்கனவே பேசியிருந்தார். அதேபோல், நம்பிக்கை தீர்மானத்தின் போது தவெக அரசுக்கு ஆதரவளித்த அதிமுகவின் எஸ்பி வேலுமணி தரப்புக்கு 5 அமைச்சர் பதவிகளை ஒதுக்க முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
முன்னதாக, தவெக அரசுக்கு ஆதரவாக எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தலைமையிலான 25 அதிமுக எம்எல்ஏ-க்கள் கரம் கோர்த்ததால் அதிருப்தியடைந்த எடப்பாடி பழனிசாமி, தவெகவுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்த 28 மாவட்டச் செயலாளர்களைப் பதவியிலிருந்து நீக்கினார். இதனால் அதிமுகவில் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டுள்ள போதிலும், எஸ்பி வேலுமணி தரப்பு விஜய்யின் அரசுக்கான ஆதரவில் உறுதியாக உள்ளது. அதிமுக தரப்புக்கு தவெக அமைச்சரவையில் இடம் கொடுப்பது குறித்த பேச்சுவார்த்தையை கேசி வீரமணியும் உறுதிப்படுத்தியுள்ளதால், வரவிருக்கும் அமைச்சரவை விரிவாக்கத்தில் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
