உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் இடநெருக்கடி காரணமாகப் தீவிர நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையுடன் பெற்றோர் மருத்துவமனைக்கு வெளியே நடைபாதையில் அமர்ந்திருக்கும் நெஞ்சை உலுக்கும் வீடியோ சமூக வலைத்தளமான ரெடிட்டில் வெளியாகிப் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், உயிருக்குப் போராடும் தன் குழந்தைக்கு ஆக்சிஜன் மாஸ்க் மற்றும் மருத்துவக் குழாய்கள் பொருத்தப்பட்ட நிலையில் தந்தை பிளாட்பாரத்தில் பிடித்துக் கொண்டிருக்க, தாய் உதவி கேட்டு அழுதுகொண்டே வழிப்போக்கர்களிடம் கெஞ்சும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. போதிய படுக்கை வசதிகளோ அல்லது அவசர சிகிச்சைக்கான உள்கட்டமைப்போ இல்லாததே இத்தகைய அவலத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்த வீடியோவைக் கண்டு கொந்தளித்த நெட்டிசன்கள், கொரோனா காலத்தில் நிலவிய சுகாதாரக் கட்டமைப்புச் சீர்கேடுகளை இது நினைவூட்டுவதாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏழை மக்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவச் சிகிச்சை கிடைக்காத நிலை குறித்து அரசு நிர்வாகத்திற்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
