தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் முதன்மையானவராக இருக்கிறார் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் மற்றும் விடுதலை என குறைவான படங்களையே அவர் இயக்கி இருந்தாலும் அந்த படங்களின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.
முன்னணி நடிகர்களை வைத்து கதையில் சமாதானங்கள் இல்லாமல் அவர் எடுக்கும் படங்கள் கமர்ஷியலாகவும் வெற்றி பெறுகின்றன. இதனால் அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அவர் படத்தில் நடிக்க சென்றால் குறைந்தது இரண்டு வருடமாவது ஆகிவிடும் என்ற இக்கட்டை பொறுத்துக் கொள்ள வேண்டும்.
2007 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்குனராக அறிமுகமான படம் பொல்லாதவன். ஒரு மிடில் கிளாஸ் இளைஞனின் வாழ்க்கையில் ஒரு பைக் வந்து என்னன்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை வித்தியாசமன பின்னணியில் சொல்லியிருப்பார். இந்த படத்துக்கு அவர் முதலில் வைத்த டைட்டில் பொல்லாதவன் இல்லை. இரும்புக்குதிரை என்ற டைட்டிலைதான் வைத்துள்ளார்.
ஆனால் தயாரிப்பு நிறுவனமோ அந்த பெயர் பிடிக்கவில்லை என சொல்லியுள்ளனர். அப்போது ரஜினி படத்தின் தலைப்புகளை மீண்டும் படங்களுக்கு வைப்பது ஒரு ட்ரண்ட்டாக இருந்துள்ளது. அதனால் ‘தம்பிக்கு இந்த ஊரு’ என்ற டைட்டிலை வைக்கலாம் என அவர்கள் சொல்லியுள்ளார்கள். இதைக் கேட்டு கடுப்பான வெற்றிமாறன் அதற்கு “பொல்லாதவன்” என்றே வைக்கலாம் என சொல்லியுள்ளார்.
அதைக் கேட்டதும் இந்த தலைப்பு சூப்பராக இருக்கு. இதையே வைக்கலாம் என அவர்கள் கூறவே வெற்றிமாறன் தஞுஷிடம் பேசி எப்படியாவது ‘இரும்புக் குதிரை’ டைட்டிலையே வைக்கலாம் என அவருக்கு போன் செய்துள்ளார். தனுஷிடம் “பொல்லாதவன்” என்று டைட்டிலை சொன்னதும் அவர் உடனே “எனக்கு இந்த டைட்டில் ரொம்ப பிடிச்சுருக்கு. இதையே வைக்கலாம்” என சொல்லிவிட்டாராம். இப்போது வேறு வழியில்லாமல் வெற்றிமாறன் பொல்லாதவன் தலைப்புக்கு ஓக்கே சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளார்.