சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிய பெற்று ஆட்சியமைத்துள்ள நிலையில், அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கொங்கு மண்டலத்தில் கட்சியின் முக்கிய தூணாக விளங்கிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மாவட்டச் செயலாளர் பதவிக் பறிக்கப்பட்டு, செ.ம. வேலுசாமிக்கு வழங்கப்பட்டது. மேலும், அவரது ஆதரவாளர்களின் பதவிகளும் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவதால் எடப்பாடி பழனிசாமி மற்றும் வேலுமணி ஆதரவாளர்களிடையே சமூக வலைதளங்களில் மோதல் வெடித்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்த வேலுமணி, கட்சியின் கொடி மற்றும் எடப்பாடியின் படம் இல்லாமல் தனது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தி, அதிமுகவிலேயே இருந்து கொண்டு எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளார்.
முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் போல வேலுமணியும் தவெகவில் இணையப் போவதாக வதந்திகள் பரவிய நிலையில், தங்கமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோருடன் இணைந்து அவர் கட்சியை பலவீனப்படுத்தாமல் எடப்பாடிக்கு பாடம் புகட்ட முயன்று வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை வேலுமணியும் தங்கமணியும் புறக்கணித்தது இந்த மோதலை வெளிச்சம்போட்டுக் காட்டியது. முன்னணி நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து கட்சியை விட்டு விலகி வருவது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், வேலுமணியைச் சமாதானப்படுத்தும் முயற்சியாக சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கும் அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். சென்னை கிண்டியில் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்திய நிலையில், ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் வேலுமணி மரியாதை செலுத்துவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
எடப்பாடியின் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொண்ட எஸ்.பி.வேலுமணி, கோவையிலிருந்து 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பிரம்மாண்ட அணிவகுப்புடன் ஈரோடு சென்று தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்தினார். இந்த மாஸ் அணிவகுப்பு மூலம் கொங்கு மண்டலத்தில் தனது செல்வாக்கையும் பலத்தையும் வேலுமணி நிரூபித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதேவேளையில், இந்த நிகழ்வின் மூலம் வேலுமணி மீண்டும் அதிமுகவின் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவார் என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.
